கோயில்களில் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கக்கூடாது... அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Sep 4, 2021, 2:13 PM IST
Highlights

மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் கோயில்களில் நடைபெறும் திருமணத்திற்கு கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. 

கோயில்களில் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கக்கூடாது என சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். 

112 அறிவிப்புகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தற்போது வெளியிட்டு வருகிறார். இதுகுறித்து அவர், ‘’திருக்கோயில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பொருட்டு செய்யும் முடிக்காணிக்கைக்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. அதற்கான கட்டணத்தை அப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு திருக்கோயில் நிர்வாகமே வழங்கும். தமிழகத்தை பொறுத்தவரை இந்து சமய அறநிலையத்துறையை பொறுத்தவரை கிட்டத்தட்ட 30,000திற்கும் அதிகமான கோயில்கள் இருக்கின்றன. பழநி, திருச்செந்தூர் உள்ளிட்ட முக்கியமான கோயில்களில் மொட்டை அடிப்பதற்காக அதிக கட்டணம் வசூலிப்பதாக ஏற்கனவே பகதர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்டோருக்கு பயிற்சி காலத்தில் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை என்பது 3000 ரூபாயாக வழங்கப்படும். ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகை 1000 ரூபாய் வழங்கப்படும். இதற்காக 13 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி கோயிலுக்கு ரூ.4 கோடியே 5 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

சூரிய மின்சக்தியில் நிறைய கோயில்களுக்கு விளக்குகள் கொடுக்கப்படும். மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் கோயில்களில் நடைபெறும் திருமணத்திற்கு கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 இடங்களில் கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும்’’என்று அவர் அறிவித்துள்ளார்.
 

click me!