நோ பாஜக... தனிக்கட்சிதான்.. கட்சி பெயரை அறிவிக்க ரஜினி அதிரடி முடிவு!

By Asianet TamilFirst Published Sep 5, 2019, 9:45 AM IST
Highlights

வரும் தை மாதத்தில் கட்சி பெயரை அறிவிக்க நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2017 டிசம்பர் இறுதியில் அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்தார். கட்சி அறிவிப்பை வெளியுட்டு இரண்டு ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், ரஜினி தொடர்ந்து சினிமாவில் நடித்துவருகிறார். 

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கட்சித் தொடங்கி தேர்தலில் போட்டியிட இருப்பதாக ரஜினி ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதற்கு முன்பாக ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை, தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ளவும் ரஜினி உத்தரவிட்டிருந்தார்.

 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் மோடியைப் பாராட்டியது, அண்மையில் மோடி, அமித் ஷா என இருவரையும் பாராட்டியது என ரஜினி காந்த் பாஜகவை நோக்கி செல்லும் தோற்றம் ஏற்பட்டது. 

ரஜினி கட்சி தொடங்கினால், பாஜகவுடன் அணி சேருவார் என்றும் பேசப்பட்டுவந்தது. இந்நிலையில் தமிழக பாஜக  தலைவர் பதவி காலியான நிலையில், அந்தப் பதவிக்கு ரஜினியைக் கொண்டு வர அமித்ஷா முயற்சி செய்துவருவதாகக் கூறப்படுகிறது. 

இதுதொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியானவண்ணம் உள்ளன. இந்த விஷயத்தில் ரஜினியை பாஜக தரப்பு நெருக்குவதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

ஆனால். இதுபற்றி ரஜினி வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, “ரசிகர்களின் விருப்பப்படிதான் கட்சித் தொடங்குவதாக ரஜினி அறிவித்தார். ரசிகர்களின் விருப்பப்படி தனி கட்சிதான் தொடங்குவார். 

அவருக்கு எல்லா கட்சியிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தனித்து அவர் கட்சித் தொடங்கினால்தான் மற்ற கட்சியில் உள்ள ரசிகர்களும் ரஜினி பின் அணி திரள்வார்கள். ஏதேனும் ஒரு கட்சியில் ரஜினி இணைந்தால், ரஜினி ரசிகர்கள் அந்தக் கட்சியில் சேரமால் போகவும் வாய்ப்புண்டு. எனவே தனி கட்சிதான்  தொடங்குவார். பாஜக மாநில தலைவராகமாட்டார்” என்று தெரிவித்தன. 

இதற்கிடையே ரஜினியுடன்  வைத்து பாஜக பேசப்படுவதால், விரைவில் கட்சி பெயரை அறிவிக்க ரஜினி முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘தர்பார்’ படப்படிப்பு முழுமையாக முடிந்த பிறகு தனி கட்சி தொடர்பாக அறிவிப்பு வெளியிட இருப்பதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வரும் பொங்கலுக்கு பிறகு கட்சி பெயரை அறிவித்துவிட்டு, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பாக தீவிர அரசியலில் ஈடுபட ரஜினி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

click me!