பாஜக மாநில தலைவரா ரஜினி..? அகில இந்திய தலைவர் பதவியையே ஏற்கமாட்டார்... அடித்து சொல்கிறார் திருநாவுக்கரசர்!

By Asianet TamilFirst Published Sep 5, 2019, 9:33 AM IST
Highlights

நடிகர் ரஜினி காந்துக்கு பாஜக அகில இந்திய தலைவர் பதவியைக் கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வது சந்தேகமே என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
 

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனால், தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பொ.ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, வானதி சீனிவாசன், சிபி. ராதாகிருஷ்ணன், கே.டி.ராகவன், நயினார் நாகேந்திரன் என பலருடைய பெயர்களும் அடுத்த தலைவர் பதவிக்கு பேசப்படுகின்றன. ஒவ்வொரு தலைவரும் தலைவர் பதவியைக் கைப்பற்ற மேலிட தலைவர்களை அணுகிவருகிறார்கள்.

இந்நிலையில் திடீரென்று இந்தப் பட்டியலில் நடிகர் ரஜினிகாந்த் பெயரும் இடம்பெறத் தொடங்கியிருக்கிறது. தேர்தல் நேரத்தில் மோடியை சிங்கம் என்று வர்ணித்த ரஜினி, அண்மையில் மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணர், அர்ஜூனன் போல செயல்படுவதாகவும் பாராட்டி பேசினார். 

பாஜகவுடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்துவரும் ரஜினியை பாஜக மேலிடம் தமிழக தலைவராக்கி, அவரை வைத்து தமிழகத்தில் பாஜகவை வளர்க்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.   

இந்நிலையில் ரஜினியின் நண்பரும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் இதைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். 

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதலில் ரஜினிகாந்த் பாஜகவின் உறுப்பினர்கூட கிடையாது. ஒரு கட்சியின் உறுப்பினராகவே இல்லாத ஒருவரை தலைவராக்க முடியாது. பாஜகவில் அந்த அளவுக்கு உறுப்பினர் இல்லையா? அல்லது  தலைவர்கள் தட்டுப்பாடா? என்று தெரியவில்லை. 

என்னைப் பொறுத்தவரையில் அகில இந்திய பாஜக தலைவர் பதவி கொடுத்தால்கூட நடிகர் ரஜினிகாந்த் அதை ஏற்றுக்கொள்வது சந்தேகமே. தமிழக மாநில தலைவர் பதவியை எல்லாம் ரஜினிகாந்த் நிச்சயம் ஏற்றுக்கொள்ளமாட்டார்.” என்று  திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

click me!