நான் மேதகுவும் கிடையாது... ஆளுநரும் கிடையாது... எப்போதும் உங்கள் வீட்டுப் பிள்ளை.. பாராட்டு விழாவில் சிக்ஸர் விளாசிய தமிழிசை!

By Asianet TamilFirst Published Sep 5, 2019, 8:13 AM IST
Highlights

‘கண்டதையும் படித்தால் பண்டிதர் ஆகலாம்’ என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். ஆனால், ‘கண்டதை படித்தால் கவர்னர் கூட ஆகலாம்’ என்று எனக்கு இப்போது தெரிந்துள்ளது என்று தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை தெரிவித்துள்ளார்.
 

தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. சென்னை சிட்டிசன்ஸ் போரம், தமிழக ரிசர்ச் பவுண்டேஷன் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில்  சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

 “‘மேதகு’ என்று என்னை  அழைக்கிறார்கள். என்னை‘மேதகு’ என்று அழைப்பதைவிட ‘பாசமிகு சகோதரி’ என்று அழைப்பதையே விரும்புகிறேன். அதுவே எனக்கு எப்போதும் பிடித்த பட்டம். 

நான் ஏதோ பெரிய சாதனையை நிகழ்த்திவிடவில்லை. இப்போதும்கூட சேலை, ஜிமிக்கி, வளையலுக்கு ஆசைப்படும் சாதாரண பெண்தான் நான். எனக்கு கொடுத்த வேலையை நான் சரியாக செய்தேன், அவ்வளவுதான். ஒவ்வொரு நிமிடத்தையும் நான் மகிழ்ச்சியாகவே கடந்து வந்துகொண்டிருக்கிறேன். ஆனால், என்னை கஷ்டப்படுத்த நினைக்கும் ‘மீம்ஸ் கிரியேட்டர்கள்’தான் தினமும் தோற்று வருகிறார்கள்.

எந்த விமர்சனங்களும் என்னை ஒருபோதும் அசைத்து பார்த்தது இல்லை. நானும் சோர்ந்து போனதில்லை. அரசியல் என்பது சாதாரணது அல்ல. என்னுடைய அப்பா குமரி அனந்தன் என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார். அப்படிப்பட்ட பாசமிகு அப்பாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்து பொதுப்பணியில் ஈடுபடுவது சாதாரண விஷயமல்ல. அது மிகப்பெரிய சவால்.எத்தனையோ முறை நான் ரணப்பட்டு போயிருக்கிறேன். 

அவர் காங்கிரஸ் கட்சிக்காரர். நானோ பாஜக தொண்டர். அவருடைய பிறந்தநாள் விழாவில்கூட என்னால் சேர முடியாமல் போயிருக்கிறது. ஆனால் அந்த ரணப்பட்ட வாழ்க்கைக்கு தற்போது மருந்தாக மாறியிருக்கிறது ஆளுநர் பதவி. ‘கண்டதையும் படித்தால் பண்டிதர் ஆகலாம்’ என்று என் அப்பா அடிக்கடி சொல்வார். 

ஆனால், ‘கண்டதை படித்தால் கவர்னர் கூட ஆகலாம்’ என்று எனக்கு இப்போது தெரிந்துள்ளது. என் வாழ்க்கையில் ஏற்பட்ட எத்தனையோ பல பிரச்சினைகளுக்கு தீர்வு தந்தது புத்தகம்தான். என் மனம் பாரமாக இருக்கும்போது புத்தகங்கள்தான் படிப்பேன். மீண்டும் நான் சொல்கிறேன், நான் ஆளுநர் அல்ல, எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளை.” என்று தமிழிசை பேசினார்.

click me!