திராவிட இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் தொட்டுப் பார்க்க முடியாது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Dec 3, 2022, 7:21 AM IST
Highlights

மிசாவில் கைதாகி சிறையில் இருந்தபோது என் மீது விழுந்த பெரும்பாலான அடியை வாங்கியவர்கள் மறைந்த சிட்டிபாபு மற்றும் வீரமணி தான். 

திமுக அரசு மீது அரசியல் எதிரிகள் விமர்சனத் தாக்குதல் நடத்தினால், எங்களுக்கு முன்னால் அதனைத் தடுக்கக்கூடிய கேடயமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடியவர் நம்முடைய ஆசிரியர் வீரமணி என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியின் 90-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்;-  என் உரையை தொடங்குவதற்கு முன்னால், பெரியார் பன்னாட்டு அமெரிக்க அமைப்பின் சார்பில் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது இந்த ஆண்டு என்னை தேர்வு செய்தமைக்கு முதலில் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அதிலும், திராவிட கழக தலைவர் வீரமணியின் 90-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் பெறுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன். இங்கு எல்லோரும் குறிப்பிட்டதைப்போல, 90 ஆம் ஆண்டு விழாவை மட்டுமல்ல - நூற்றாண்டு விழாவையும் நாங்கள் எடுப்போம் – ஏன், நூற்றாண்டைக் கடந்து அவருடைய பிறந்தநாளை இதே எழுச்சியோடும் - உணர்ச்சியோடும் கொண்டாடுவோம் என்பதன் அடையாளம்தான் இந்த விழா அமைந்திருக்கிறது.

இதையும் படிங்க;- மாற்றுத்திறனாளிகள் துறையை எனது தனி கவனத்தில் வைத்துள்ளேன்.. கவலைப்படாதீங்க.. முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

மிசாவில் கைதாகி சிறையில் இருந்தபோது என் மீது விழுந்த பெரும்பாலான அடியை வாங்கியவர்கள் மறைந்த சிட்டிபாபு மற்றும் வீரமணி தான். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது - இந்த ஆட்சி மீது அரசியல் எதிரிகள் விமர்சனத் தாக்குதல் நடத்தினால், எங்களுக்கு முன்னால் அதனைத் தடுக்கக்கூடிய கேடயமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடியவர் நம்முடைய ஆசிரியர் வீரமணி. எதிரிகள் மீது கொள்கை அம்பு பாய்ச்சும் சொல் வீச்சுக்காரராக செயல்படுபவர்தான் நம்முடைய ஆசிரியர் அவர்கள். தினந்தோறும் அவர் விடும் அறிக்கைகள் மூலமாக, நாங்கள் எடுக்க வேண்டிய முடிவுகள் அத்தனையையும் நாங்கள்  தீர்மானிக்க வேண்டும். அண்ணன் வைகோ அவர்களும், நம்முடைய திருமா அவர்களும் சொன்னார்கள், தமிழக முதல்வருக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும், இருக்கிறார், இருப்பார் என்று சொன்னார்கள். அதுதான் என்னை இந்த அளவிற்கு உற்சாகத்தை, ஊக்கத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது. நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் மறைவிற்குப் பிறகு திக்கற்ற நிலையில் இருந்த நேரத்தில் தைரியத்தை, தெம்பை ஊட்டி இன்றைக்கு திராவிட மாடல் என்று சொல்லக்கூடிய அளவிற்கு உணர்ச்சி ஏற்படுத்தித் தந்தவர் நம்முடைய ஆசிரியர் வீரமணி தான்.

குடும்பம் குடும்பமாக இயக்கம் நடத்திய காரணத்தால் இது குடும்ப இயக்கம். குடும்பக் கொள்கை இயக்கம். குடும்பப் பாச உணர்வு கொண்டிருக்கக்கூடிய இயக்கம். கொள்கையும் லட்சியமும் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் பாசமும் அன்பும் இருப்பதால்தான், இந்த திராவிட இயக்கத்தின் அடிக்கட்டுமானத்தை யாராலும், எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை. இனியும் முடியாது. திராவிட இயக்கம் என்பது ஒரு கட்சியல்ல. இது ஒரு கொள்கை உணர்வு! அந்தக் கொள்கை உணர்வு வளரும்! வளர்ந்து கொண்டே இருக்கும்! அந்த உணர்வை யாராலும் தடுத்திட முடியாது, அழித்திட முடியாது. இந்த உணர்வானது திராவிட இயக்கத்துக்குள் மட்டுமல்ல, அனைத்து இயக்கங்களுக்கு உள்ளேயும் ஊடுருவி விட்டது. அதன் அடையாளமாகத்தான் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இந்த விழாவிலே பங்கேற்று இங்கே அண்ணன் ஆசிரியர் அவர்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க;-  இதற்கு திமுகவினர் வெட்கி தலை குனிய வேண்டும்.. ஆன்லைன் சூதாட்ட பலிகளுக்கு ஸ்டாலினே பொறுப்பு.. அண்ணாமலை சரவெடி.!

சமூகநீதி - சுயமரியாதை - பகுத்தறிவு - பெண் விடுதலை - மாநில சுயாட்சி - கூட்டாட்சித் தத்துவம் - இன உரிமை - மொழிப்பற்று ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய திராவிடக் கொள்கையின் அடையாளமாக நம்முடைய ஆசிரியர் அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனை அரசியல் களத்தில் வென்றெடுத்து, தமிழ்நாட்டு மக்களைத் தன்மானம் உள்ளவர்களாக - அனைத்து உரிமைகளையும் கொண்டவர்களாக ஆக்குவது மட்டுமல்ல, அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்து தரக்கூடிய திராவிட மாடல் ஆட்சியைத்தான் இன்றைக்கு நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

ஒரு சிறுவனாய் இருந்து திராவிடக் கொள்கையைப் பேசிய காலத்தில், இந்தக் கொள்கையை நிறைவேற்றக்கூடிய திராவிட மாடல் ஆட்சியானது அமையும் என்று ஆசிரியர் அவர்கள் நினைத்திருப்பாரா என்று எனக்குத்  தெரியவில்லை. ஆனால், தனது கனவுகள் நிறைவேறி வரும் காலத்தையும் ஆசிரியர் அவர்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார், அதுதான் எனக்கு மகிழ்ச்சி. ஒரு சீர்திருத்த இயக்கம் அரசியல் பரிணாமம் பெற்று, ஆட்சியைப் பிடித்து, தான் பேசிய கொள்கைகளை நிறைவேற்றும், சட்டங்களை இயற்றும் தகுதியை அடைந்தது இந்திய வரலாற்றில் திராவிட இயக்கத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமை!

இத்தகைய பெருமைக்குரிய இயக்கத்தை வழிநடத்தும் ஆசிரியர் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகிறேன். ஏன், தமிழ்நாட்டு மக்களின் சார்பில், தமிழர்களின் சார்பில் நான் வாழ்த்துகிறேன். இன்று நம்முடைய தலைவர் கலைஞர் இருந்திருந்தால், 99 வயதில் இந்த மேடையில் உதயசூரியனாய் காட்சி அளித்திருப்பார். அப்படிப்பட்ட நிலையில், 90 வயது ஆசிரியரை 99 வயது கலைஞர் அவர்கள் நிச்சயம் பாராட்டி இருப்பார். இன்றைக்கு அவர் இல்லை. கலைஞரின் மகனான நான் அவரது சொல் எடுத்து ஆசிரியர் அவர்களை நான் வாழ்த்துகிறேன்... கலைஞரின் மகனான நான் அவரது சொல் எடுத்து ஆசிரியர் அவர்களை நான் வாழ்த்துகிறேன் என முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

இதையும் படிங்க;-   அப்பாடா! ஒருவழியாக கோபம் குறைந்த முதல்வர் ஸ்டாலின்? முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு திமுகவில் முக்கிய பதவி

click me!