
சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்கினால் மட்டுமே இரு அணிகள் இணைப்பு சாத்தியம் !! மாஃபா பாண்டியராஜன் அதிரடி…
அதிமுக வில் இருந்தது சசிகலா குடும்பத்தை, நீக்கினால் மட்டுமே கட்சியின் இரு அணிகள் இணைப்பு குறித்து பேச்சு வார்த்ததை நடப்பது சாத்தியம் என்பதில்ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் உறுதியாக உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாகப் பிரிந்தது. . சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகிய இருவரும் சிறைக்கு சென்றதையடுத்து இந்த அணிகளை இணைக்க, சிலர் முயற்சி எடுத்தனர்.
பேச்சு வார்த்தை நடத்த குழுக்கள் கூட அமைக்கப்பட்டன. ஆனால் அதிமுகவை விட்டு சசிகலா குடும்பத்தை விலக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு, அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என ஓபிஎஸ் அணி நிபந்தனை விதித்தது.
இதைத் தொடர்ந்து, தினகரனை கட்சியில் இருந்து விலக்கி வைப்பதாக, அமைச்சர்கள் அறிவித்தனர். தினகரனும் ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அவர்கள் இருவரையும் கட்சியில் இருந்து நீக்குவதற்கான எந்த நடிபக்கையும் எடுக்கவில்லை. இதனால் இணைப்பு பேச்சுவார்த்தை கைவிடப்பட்டது.
இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த தினகரன், மீண்டும் கட்சிப் பணிகளை தொடங்கப்போவதாக போவதாக அறிவித்தார். அவரை, பல எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து வருகின்றனர். தினகரனை சந்திப்பதில் தவறில்லை என சில அமைச்சர்களும் கூறி வருகின்றனர்.
இதனால் அதிருப்தி அடைந்துள்ள ஓபிஎஸ் அணியினர், இரு அணிகள் இணைப்பு குறித்து பேச்சு நடத்த வேண்டும் என்றால், சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் , எங்களுடைய நிலைப்பாட்டில், எந்த மாற்றமும் கிடையாது. சசிகலா குடும்பத்தை விலக்காமல், இணைப்பு சாத்தியமில்லை,என தெரிவித்தார்.