மண் மற்றும் நிலத்தடி நீரின் தரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்ட 31 இடங்களில் 17 இடங்களில் நிலத்தடி நீரின் தரம் மிக கடுமையாகவும், 11 இடங்களில் குறிப்பிடத்தக்க அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கு வெள்ளூர் என்ற கிராமத்தில் நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 250 மடங்கு அதிகமாக பாதரசம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் அப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கு எத்தகைய பாதிப்புகளை விட பலமடங்கு அதிக பாதிப்புகள் என்எல்சியால் ஏற்பட்டிருக்கின்றன என்பது ஆய்வு முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது என அன்புமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக தலைவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கடலூர் மாவட்டத்தில் என்எல்சி மற்றும் பரங்கிப்பேட்டை தனியார் அனல் மின் நிலையம் பகுதிகளில் பூவுலகின் நண்பர்கள், மந்தன் அத்யயன் கேந்திரா ஆகிய தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்ட ஆய்வில் மண் மற்றும் நிலத்தடி நீரின் பாதிப்புகள் குறித்து அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தெரியவந்துள்ளன.
இதையும் படிங்க;- நிலமே வழங்காத வடஇந்தியர்களுக்கு NLC வேலை வழங்கியது எப்படி? பின்னணியில் ஊழல் முறைகேடு!அம்பலப்படுத்தும் அன்புமணி
தமிழ்நாடு அரசால் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் அப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டனவோ, அதைவிட பலமடங்கு அதிக பாதிப்புகள் என்எல்சியால் ஏற்பட்டிருக்கின்றன என்பது ஆய்வு முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டை விட்டு என்எல்சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை மிகவும் நியாயமானது, சரியானது என்பதை இந்த ஆய்வு முடிவுகள் நிரூபிக்கின்றன.
மண் மற்றும் நிலத்தடி நீரின் தரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்ட 31 இடங்களில் 17 இடங்களில் நிலத்தடி நீரின் தரம் மிக கடுமையாகவும், 11 இடங்களில் குறிப்பிடத்தக்க அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன. வடக்கு வெள்ளூர் என்ற கிராமத்தில் நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 250 மடங்கு அதிகமாக பாதரசம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆய்வு நடத்தப்பட்ட 90% வீடுகளில் உள்ளவர்களில் எவரேனும் ஒருவருக்கு சிறுநீரகம் தோல் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது உறுதியாகியுள்ளது. என்எல்சி நிறுவனம் எத்தகைய தீமைகளை ஏற்படுத்தி வருகிறது என்பதற்கு இதுவே சான்று.
இதையும் படிங்க;- ஸ்டெர்லைட்டை காட்டிலும் 100 மடங்கு பெரிய பிரச்சினை என்.எல்.சி. அன்புமணி எச்சரிக்கை
என்எல்சி நிறுவனத்தின் சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையங்களால் கடலூர் மாவட்ட மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எந்தெந்த வழிகளில் எல்லாம் சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். கடலூர் மாவட்டம் முழுவதும் சுரங்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 30 லட்சம் மக்களும் என்எல்சியால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டு ஆகும்.
என்எல்சியின் சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களால் அப்பகுதியில் வாழும் மக்களின் உடல் நலனுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று 2022 ஆம் ஆண்டு மே மாதம் சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டது. ஆனால் அதன்பின் 15 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்று வரை எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை. என்எல்சியால் மண்ணுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பாதிப்புகள் வெளிவராமல் தடுக்கும் முயற்சியாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது. பாதிப்புகளை மூடி மறைப்பது மேலும் மோசமான விளைவுகள் ஏற்படுவதற்கே வழிவகுக்கும்.
என்எல்சி சுரங்கங்கள் அமைக்கப்பட்டு 66 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எந்த ஆய்வுமே இல்லாமல் வெளிப்படையாகவே தெரிகின்றன. ஆனாலும் கூட என்எல்சி நிறுவனத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்த மத்திய, மாநில அரசுகள் முன் வரவில்லை. தனியார் தொண்டு நிறுவன ஆய்வில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ள நிலையில், இனியும் தாமதிக்காமல் சென்னை ஐஐடி மூலம் ஆய்வு நடத்த மத்திய, மாநில அரசுகள் முன் வரவேண்டும். என்எல்சியால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது ஆய்வில் உறுதி செய்யப்பட்டால் அதனடிப்படையில் என்எல்சி நிறுவனத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.