அடுத்ததாக கோயில்கள் இணைப்பு... கேப் விடாமல் அடிச்சுத் தூக்கும் அமைச்சர் சேகர்பாபு..!

By Asianet TamilFirst Published Oct 23, 2021, 9:34 AM IST
Highlights

வருவாய் அதிகமுள்ள கோயில்களோடு, வருவாய் குறைந்த கோயில்களை இணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
 

சேகர்பாபு அமைச்சராகப் பதவியேற்றது முதலே இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை பரபரப்பாகவே செயல்படுகிறது. அத்துறை சார்ந்த செய்திகள் நாள்தோறும் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வகையில் வருவாய் அதிகமுள்ள கோயில்களோடு வருவாய் குறைந்த கோயில்களை இணைப்பது பற்றிய தகவலை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
 “காஞ்சிபுரம் பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு உதயகிரி சாமைய்ய ஜமீன்தார் என்பவரின் மகன் வெங்கைய்யா என்பவர், இக்கோயிலில் பூஜைகள், பராமரிப்பு பணிகளுக்காக, இரண்டு ஜமீன் கிராம நிலங்களை உயில் சாசனமாக, 177 ஏக்கர் இடத்தை, 1984-ஆம் ஆண்டில்  வழங்கி உள்ளார். அதில், ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள். அந்த இடங்களை மீட்டெடுக்க அறநிலையத் துறை, வருவாய் துறையுடன் இணைந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தால் மனம் லேசாகும். ஆனால், இந்த கோவில் சிதிலடைந்து உள்ளதை கண்டு மனம் கனக்கிறது.
எனவே, இக்கோயிலில் விரைவில் திருப்பணி நடத்தி கும்பாபிஷேகம் நடத்தப்படும். இக்கோயிலின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். இக்கோயிலுக்கு சொந்தமான 177 ஏக்கர் இடத்தின் பெயரில் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்றாலும், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளோம். சென்னை குயின்ஸ் லேண்ட் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவர்கள் தரப்பிலிருந்து விளக்கம் தந்துள்ளனர். அந்த நிலத்தை அரசு மீட்கும் பணி மேற்கொள்ளப்படும். வருவாய் குறைவாக உள்ள கோயில்களை வருவாய் அதிகம் உள்ள கோயில்களோடு இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” என்று சேகர்பாபு தெரிவித்தார். 

click me!