சிபிஎஸ்இ-யில் தமிழ் இனி முக்கியத்துவம் இல்லாத பாடமா..? புதிய சர்ச்சையில் சிபிஎஸ்இ.. கொதிக்கும் அன்புமணி.!

By Asianet TamilFirst Published Oct 23, 2021, 9:04 AM IST
Highlights

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப்பாடங்களை முக்கியத்துவமற்ற பாடங்களாக அறிவித்திருப்பது மாநில மொழிப் பாடங்களுக்கு எதிரான செயல் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் அடிக்கடி சர்ச்சைகள் எழுவது வாடிக்கை. அந்த வகையில் மொழிப் பாடங்களில் முதன்மையான பாடம், முக்கியத்துவம் இல்லாத பாடம் எனப் பிரித்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் இதைக் கண்டித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘நவம்பர் 17-ஆம் தேதி தொடங்கும் 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்கள் முதன்மைப் பாடங்களாகவும், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்கள் முக்கியத்துவம் இல்லாத பாடங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த பாடங்களுக்கானத் தேர்வை சி.பி.எஸ்.இ. அமைப்பே நேரடியாக நடத்தி மதிப்பெண் வழங்குமாம். முக்கியத்துவம் இல்லாத பாடங்களுக்கானத் தேர்வுகளை அந்தந்த பள்ளிகளே நடத்தி மதிப்பெண் வழங்கிக் கொள்ளலாமாம். இது நியாயமல்ல.
10-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுக்கான பாடங்களை முதன்மைப் பாடங்கள், முக்கியத்துவம் இல்லாத பாடங்கள் எனப் பிரித்திருப்பது இதுவே முதல்முறையாகும். இவ்வாறு வகைப்படுத்துவதன் மூலம் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பாடங்களை சிறுமைப்படுத்த சிபிஎஸ்இ முயல்கிறது. இது கண்டிக்கத்தக்கது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப்பாடங்களை முக்கியத்துவமற்ற பாடங்களாக அறிவிப்பதன் மூலம், அவற்றை மாணவர்கள் விரும்பி படிக்காத நிலை உருவாகிவிடும். அந்த வகையில் இது மாநில மொழிப் பாடங்களுக்கு எதிரான செயல்தான். இதை சி.பி.எஸ்.இ. கைவிடவேண்டும்.” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

click me!