புதிய பதவிகள்.. உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அதிரடி ட்விஸ்ட்... உடன்பிறப்புகளுக்கு டீஸர் காட்டிய துரைமுருகன்.!

By Asianet TamilFirst Published Sep 28, 2021, 8:30 AM IST
Highlights

உள்ளாட்சித் தேர்தலில் பணி செய்யாத நிர்வாகிகள் கட்சியில் கட்டம் கட்டப்படுவார்கள் என்று திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் எச்சரித்துள்ளார். 
 

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், “ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக விரைவில் கட்டுப்படுத்தப்பட்டது. அதற்கு தமிழக முதல்வரின் நடவடிக்கைதான் காரணம். தற்போது உலகமே உற்றுநோக்கிடும் வகையில் அதிக தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலமாக தமிழ்நாடுதான் விளங்கிக் கொண்டிருக்கிறது. மக்களின் உயிரைக் காக்கும் அரசாக திமுக அரசு உள்ளது.
நாங்கள் இன்னும் முழுமையாகப் பணியாற்றவில்லை. அதற்கு முன்பாகவே இந்தத் தேர்தல் வந்துவிட்டது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற இந்த 150 நாட்களில் ஆற்றிய பணி  அத்தனை சிறப்புக்குரியது. நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் நம்முடைய வேட்பாளர்கள் எல்லோரையும் வெற்றி பெறச்செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு கிடைக்காதவர்களும் ஓய்வின்றி தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும். அப்படித் தேர்தல் பணி செய்யாத நிர்வாகிகள் கட்சியில் கட்டம் கட்டப்படுவார்கள்.
உள்ளாட்சி தேர்தல் முடிவு வெளியான பிறகு, 3 தினங்களில் கூட்டுறவு சங்க நிர்வாக குழு கலைக்கப்பட்டு புதிய நிர்வாக குழு தேர்ந்தெடுக்கப்படும். அதுபோல 32 வாரியங்களும் கலைக்கப்பட்டு, உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு பதவிகள் வழங்கப்படும். 10 ஆண்டு காலம் பதவியில் இருந்தவர்கள் அகற்றப்படுவார்கள். இந்த ஆட்சியில் 5 வருடமாவது உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். எனவே, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக உழைத்து எல்லோரையும் வெற்றி பெற செய்ய வேண்டும்” என்று துரைமுருகன் பேசினார். 

click me!