
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நாளை டெல்லிக்கு செல்கிறார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விவாதிப்பார் என கூறப்படுகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு முதன் முறையாக ஆளுநர் டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு அக்டோபரில் நிறைவடைய உள்ளது. தற்போது அமைச்சரவையிலிருந்து பல மூத்த அமைச்சர்கள் விலகி உள்ளனர். இவர்களில் சிலருக்கு ஆளுநர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ரவிசங்கர் பிரசாத்து தமிழக ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சூழ்நிலையில் தமிழக ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.