நீர்வள ஆதாரத்தை அதிகரிக்க புதிய தடுப்பு அணைகள்.. அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் போட்ட அதிரடி உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published Jul 9, 2021, 1:10 PM IST
Highlights

நீர்வள ஆதாரத்தை அதிகரிக்கும் வகையில் திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் புதிய தடுப்பு அணைகள் மற்றும் புதிய நீர்நிலைகளை உருவாக்க முன்னுரிமை வழங்க வேண்டும் என நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.
 

நீர்வள ஆதாரத்தை அதிகரிக்கும் வகையில் திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் புதிய தடுப்பு அணைகள் மற்றும் புதிய நீர்நிலைகளை உருவாக்க முன்னுரிமை வழங்க வேண்டும் என நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தி யுள்ளார். தலைமை செயலகத்தில் நீர்வளத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு நீர்பாசன திட்டங்கள் செயலாக்கம் குறித்தும், பணிகளின் முன்னேற்றம் குறித்தும், புதிய திட்டங்களை உறுவாக்குதல் குறித்தும்  உயர் அலுவலர்களுடன் அமைச்சர் துரைமுருகன் பணி ஆய்வுக் கூட்டம் நடத்தினார். 

இன்றைய ஆய்வு கூட்டத்தில் திருச்சி மண்டலத்தில் காவேரி -குண்டாறு இணைப்புத் திட்டம், கட்டளைக் கால்வாய், இராஜவாய்க்கால், நஞ்சை புகலுார், ஆதனூர் குமாரமங்கலம் மற்றும் முக்கொம்பு மேலணை ஆகிய இடங்களில் கட்டப்படும் கதவணை, கல்லணைக் கால்வாய், காவேரிக் கால்வாய் ஆகியவற்றில் நடைபெறும் புனரமைப்புத் திட்டங்கள் ஆகியவற்றின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சென்னை மண்டலத்தில் திருவள்ளூர் மாவட்டம் காட்டூர் தத்தமஞ்சு ஏரிகளின் கொள்ளளவினை மேம்படுத்தி நீர்தேக்கம் அமைக்கும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும், விழுப்புரம் மாவட்டம் கழுவேலி ஏரியை மீட்டெடுக்கும் திட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கொளவாய் ஏரியினை மீட்டெடுக்கும் திட்டம், வெள்ளத் தணிப்புத் திட்டம், தூண்டில் வளைவுகள் மற்றும் கடலோர தடுப்புச் சுவர்கள் அமைக்கும் திட்டம் ஆகியவற்றின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

மேலும், நீர்வள ஆதாரத்தை அதிகரிக்கும் வகையில் புதிய தடுப்பு அணைகள், புதிய நீர்நிலைகளை உருவாக்குதல், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருக்கும் நீர்நிலைகளைச் செப்பனிட முன்னுரிமை வழங்கி பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து ஆய்வு செய்து திட்ட மதிப்பீடுகளை விரைவில் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் சந்திப் சக்சேனா மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

click me!