#BREAKING அடங்காத கர்நாடகா... அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 9, 2021, 1:10 PM IST
Highlights

காவிரி ஆற்றின் குறுக்கே மேதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு உறுதியாக உள்ள நிலையில் ஜூலை 12ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. அதற்கான செயல்திட்டத்தை வகுப்பது குறித்தும் வார இறுதியில் சட்ட வல்லுனர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் முதல்-அமைச்சர் எடியூரப்பா ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது. லட்சக்கணக்கான  தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியைக் கைவிட வேண்டுமென வலியுறுத்தி கடந்த 4ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு கடிதம் எழுதியிருந்தார். 

மேலும், தமிழக விவசாயிகளின் நலன்களைப் பாதுகாத்திட மேகதாதுவிலோ அல்லது வேறு எந்த ஒரு இடத்திலோ அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பதோடு, அதைத் தடுத்து நிறுத்துவதற்கு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். 

கர்நாடக அரசின் செயல்பாடுகளை எதிர்க்கும் விதமாகவும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் ஓரணியில் திரண்டுள்ளதை மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டும் வகையிலும் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டுமென தமிழக அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் வரும் 12ம் தேதி மேகதாது அணை பிரச்சனை பற்றி விவாதிக்க அனைத்துக் கூட்டத்தை கூட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

வரும் திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அடுத்தக்கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. சட்ட ரீதியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாமா? அல்லது காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையிடலாமா? என்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

click me!