
மாட்டிறைச்சி மீதான மத்திய அரசின் தடை உத்தரவு நாடு முழுவதும் அனலாய் தகித்து வருகிறது. கால்நடை வர்த்தகத்தின் போது விலங்குகள் வதைபடுத்தப்படுவதை தவிர்க்கவே இப்புதிய நடைமுறைகள் என மத்திய அரசு தனது செயலுக்கு நியாயம் கற்பித்து வருகிறது.
ரஜினியின் காலா திரைப்படம் கமர்ஷியலா...! அரசியலா....! என்பதைப் போல விலங்குகள் வதைபடுத்தப்படுவதை தடுக்க அல்ல, சிறுபான்மையின மக்கள் மீதான வன்மம் என்கின்றனர் எதிர்க்கட்சிகள்.
கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கன்றுக் கொட்டியை வெட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும்படி தடலாடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் புதுவை முதல் அமைச்சர் நாராயணசாமி.
மாட்டிறைச்சி பிரச்சனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சிறுபான்மையின மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்நடவடிக்கையை ஏற்க முடியாது. மத்திய அரசின் இம்முடிவுக்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே மாட்டிறைச்சி சட்டத்தை புதுச்சேரியில் தடை விதிக்க முடியாது. " இவ்வாறு நாராயணசாமி கூறினார்.