
தமிழ்நாட்டில் பாஜக விரைவில் காலூண்றும் என்றும், தற்போது மிக வேகமாக பாஜக முன்னேறி வருவதாகவும் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சிப்பதாக அனைத்துக்கட்சிகளுமே குற்றம்சாட்டி வந்தன.
ஆனால் பொன்னார், தமிழிசை உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் இதனை தொடர்ந்து மறுத்துவருகின்றனர்.
இந்நிலையில் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் பாஜக மிக வேகமாக வளர்ந்து வருவதாக குறிப்பிட்டார். பாஜக வின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது எனவும் அவர் கூறினார்.
கால்நடைகளை காப்பாற்றும் விதத்தில் கொண்டுவரப்பட்ட மாட்டிறைச்சி தடைச்சட்டத்தை எந்த மதத்துடனும் ஒப்பிட வேண்டாம் என்று பொன்னார் கேட்டுக்கொண்டார்.
விவசாயிகளை காப்பாற்றவே பிரதமர் நரேந்திர மோடி இந் நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி அரசியலில் இல்லாததால் தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றுவருவதாகவும் பொன்னார் குறிப்பிட்டார்.