பாஜகவை, மத்திய அரசை தொடர்புபடுத்தி, பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது நம் கடமை. இந்த விவகாரத்தில் நாம் ஏன் தலையிட வேண்டும் என சிலர் கேட்பது வெட்கக்கேடு. கட்சியின் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களை தண்டிப்பது என் பொறுப்பு என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
பாஜக பெயரை பயன்படுத்தி மோசடி
பாஜக பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், MSME Promotion Council என்ற போலி அமைப்பை உருவாக்கி தன்னை அகில இந்திய தலைவராக முடிசூட்டிக் கொண்ட முத்துராமன் என்பவர் தேசிய கொடியை தன் காரில் பறக்க விட்டுக்கொண்டு,
அரசு சின்னத்தை பயன்படுத்தி கொண்டு, பிரதமருடன் இருப்பது போன்ற போலி புகைப்படங்களுடன், சில அமைச்சர்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற மாயையை உருவாக்கி, பொது மக்களை, குறிப்பாக பாஜக நிர்வாகிகளை, தொண்டர்களை குறிவைத்து தொழில் தொடங்க மத்திய அரசு மானியம் பெற்று தருவதாகவும்,
50 லட்சம் மோசடி புகார்
வங்கிகளில் நிதியுதவி பெற்று தருவதாகவும் ஆசை காட்டி மோசம் செய்து கொண்டிருந்த கும்பல் குறித்து நானும், பாஜக தொழில் துறை தலைவர் திரு.கோவர்தனன் அவர்களும் எடுத்து கொண்ட முயற்சியின் அடிப்படையில் முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் என்ற இரு நபர்களை கைது செய்தது தமிழக காவல்துறை. சேலத்தை சேர்ந்த ஒரு நபர், தான் முத்துராமனிடம் ரூபாய் 50 லட்சம் கொடுத்து ஏமாந்ததாக அளித்த புகாரின் மீது மோசடி பிரிவுகளிலும், தேசிய கொடியை, அரசு சின்னத்தை தவறாக பயன்படுத்தியதன் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளிலும் வழக்கு தொடரப்பட்டு, கைது செய்யப்பட்டிருந்த நிலையில் முத்துராமன் என்ற குற்றம் சாட்டப்பட்டவருக்கு இடைக்கால பிணையளித்தது சென்னை உயர்நீதி மன்றம்.
பிணையை மறுத்த நீதிமன்றம்
அந்த வேளையில், புகாரளித்த நபருக்கு பணத்தை திருப்பி கொடுத்து விட்டு, நீதிமன்றத்தில் புகாரை திரும்பப்பெற்று விட்டதாகவும் அறிவித்திருந்த நிலையில், நேற்று பிணையை மறுத்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதி மன்றம். கைது நடவடிக்கையின் மூலம் தான் மோசடி செய்த பணத்தை திருப்பி கொடுத்ததாகவும் இது போன்று பலர் ஏமாற்றுப்பட்டிருக்க வாய்ப்புள்ள நிலையிலும் பிணையினை மறுத்துள்ளது சென்னை உயர்நீதி மன்றம். இந்த நபரால், இந்த போலி அமைப்பினால் ஏமாற்றப்பட்டவர்கள் காவல் துறையில் புகார் அளிப்பதன் மூலம் இழந்த பணத்தை திரும்ப பெறுவதோடு, இனி வேறு யாரும் இந்த மோசடி கும்பலிடம் ஏமாறாமல் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். இந்த மோசடி கும்பலில் இன்னும் பலர் இருப்பதாக சொல்லப்படுகிற நிலையில்,
இந்த வழக்கின் விசாரணை சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்த மோசடியில் தொடர்புடைய நபர்களை (யாராக இருந்தாலும்) கண்டுபிடித்து உரிய தண்டனையை பெற்று தர வேண்டியது தமிழக காவல்துறையின் பொறுப்பு. இந்த விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலோடு தான் கட்சி ரீதியான புகார் மற்றும் இதர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பாஜகவை, மத்திய அரசை தொடர்புபடுத்தி, பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது நம் கடமை. இந்த விவகாரத்தில் நாம் ஏன் தலையிட வேண்டும் என சிலர் கேட்பது வெட்கக்கேடு. கட்சியின் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களை தண்டிப்பது என் பொறுப்பு.
அமைதியாக இருக்க முடியாது
என் கட்சியின் தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் ஏமாறுவதை என்னால் வேடிக்கை பார்த்து கொண்டு அமைதியாக இருக்க முடியாது. அதனால் தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது வாழ்வில் தூய்மை, ஊழலற்ற ஆட்சி, முறைகேடுகளை ஒழிக்க முனையும் கட்சி என்பதால் தான் பத்து வருடங்களாக ஆட்சியில் இருக்கிறோம். மேலும், இருக்க போகிறோம். இந்த சூழ்நிலையில் லஞ்சம், ஊழல், மோசடி, முறைகேடுகள் என தீய சக்திகள் எந்த ரூபத்தில் வந்தாலும், அவர்களையும், அவர்களுக்கு துணை நிற்பவர்களையும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்! ரூ.100 கோடி மோசடியில் என்ன தொடர்பு?