சசிகலாவுக்கு தகுதி இல்லை – நாஞ்சில் சம்பத் அதிரடி

First Published Jan 3, 2017, 11:13 AM IST
Highlights


மதிமுக துணை பொது செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து அவர், அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக அதிமுகவில் வலம் வந்தார்.

கடந்த மாதம் 5ம் தேதி ஜெயலலிதா காலமானார். அதன்பின், நாஞ்சில் சம்பத் கட்சியில் இருந்து சற்று விலகி இருந்தார். கட்சியின் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. கட்சியில் இருந்து விலகியதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, பதில் அளிக்காமல் மவுனமாக இருந்தார்.

இந்நிலையில், நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத், அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், அதிமுகவில் பொதுச் செயலாளராக பதவி வகிக்க சசிகலாவுக்கு தகுதி இல்லை. அக்கட்சியின் தலைமை பொறுப்பு வகிக்க அவருக்கு எந்த தகுதியும் கிடையாது.

அதிமுகவும், தமிழக அரசும் தரை தட்டிய கப்பல்போல் ஆகிவிட்டது. அண்ணா ஏற்றிய மாநில சுயாட்சி தீபம் அணைந்தே போய்விட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேஸ்புக் பக்கத்தில் நாஞ்சில் சம்பத் கூறியிருப்பதாவது:-

கடந்த 2012 டிசம்பர் 16ம் தேதி கட்சி பிரச்சாரத்துக்காக அதிமுக பொருளாளர் பெயரில் வாங்கப்பட்ட கார், என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. ஜெயலலிதா, சாவியை என்னிடத்தில் ஒப்படைத்தார்.

அந்த காரை கட்சியின் பிரச்சாரத்தை தவிர என்னுடைய சொந்த உபயோகத்துக்கு ஒருநாளும் பயன்படுத்தவில்லை. பிரச்சாரம் இல்லாத நாட்களில் என்னுடைய நண்பர் ஜாபர் அலி வீட்டில் பாதுகாப்பாக நிற்கும்.

இப்போது 8 மாத காலமாக பிரச்சாரம் இல்லை, வீணாக அதை வைத்து கொண்டு இன்னோவா சம்பத் என பழியும் சுமந்து கொண்டு எதற்கு இருக்க வேண்டும் என்று எண்ணி இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டேன்.

இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

click me!