பாஜகவுடன் தங்களது கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்ட இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாஜகவின் மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரனின் சகோதரர் வீரபெருமாள் நயினார் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
அதிமுக- பாஜக மோதல்
அதிமுக- பாஜக இடையே கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு தரப்பிற்கும் இடைய வார்த்தை போர் அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், அறிஞர் அண்ணா மற்றும் ஜெயலலிதா தொடர்பாக அண்ணாமலை கூறிய கருத்து மோதலை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றது. இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,
அதிரடியாக பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி அதிர்ச்சி கொடுத்தது. இதனையடுத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த நயினார் நாகேந்திரன், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
அதிமுகவில் இணைந்த நயினார் வீரபெருமாள்
இதனையடுத்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர், சட்டமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தற்போது பாஜக மாநில துணை தலைவராக உள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் நயினார் நாகேந்திரனின் சகோதரர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி அவர்களை, திருநெல்வேலி மாவட்ட திமுக இளைஞர் அணி முன்னாள் செயலாளர் திரு. வீரபெருமாள் நயினார் (பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு. நயினார் நாகேந்திரன், M.L.A., அவர்களுடைய மூத்த சகோதரர்) சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
மீண்டும் அதிமுகவில் வசந்தி முருகேசன்
இதே போல திமுக-வில் இருந்து விலகிய, திருநெல்வேலி மாவட்டம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன் அவர்களும் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்வின்போது, அதிமுக அமைப்புச் செயலாளர் திரு. V. கருப்பசாமி பாண்டியன், Ex. M.L.A., திருநெல்வேலி மாவட்டக் கழகச் செயலாளர் திரு. தச்சை N. கணேசராஜா உள்ளிட்ட தலைமைக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் உடன் இருந்தனர்.
இதையும் படியுங்கள்