அதிமுக அன்றைக்கு நெல்லிக்காய் மூட்டை அதனை கட்டி வைத்தது பாஜக என தெரிவித்த எச் .ராஜா அதிமுகவை நாங்கள் ஒட்டி வைக்கவில்லை என்றால் சிதறி இருக்கும். அதனை பாதுகாக்க எங்கள் கையே எவ்வளவு வலித்தது என எங்களுக்கு தான் தெரியும் என கூறியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி முறிவு
நாடாளுமன்ற தேர்தலை தமிழகத்தில் அதிமுக கூட்டணியோடு இணைந்து பாஜக எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு தரப்பிற்கும் இடையே நீண்ட காலமாக நடைபெற்று வந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதனையடுத்து பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதாக அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜகவினர் தனித்தனியாக பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் பாஜக கூட்டணி முறிவால் இனி எந்த பிரச்சனை வந்தாலும் சந்திக்க தயார் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதிமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது ரொம்ப சந்தோசம். இபிஎஸ் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தார் என்றால் அதற்கு காரணம் பாஜக, அதனை எடப்பாடி மறந்தால் நன்றி மறந்தவர். அதிமுக அன்றைக்கு நெல்லிக்காய் மூட்டை அதனை கட்டி வைத்தது பாஜக. அதிமுகவை நாங்கள் ஒட்டி வைக்கவில்லை என்றால் சிதறி இருக்கும். அதனை பாதுகாக்க எங்கள் கையே எவ்வளவு வலித்தது என எங்களுக்கு தான் தெரியும். அவர்கள்(ஓபிஎஸ்) ஒன்னு சொல்ல இவர்களும்(இபிஎஸ்) சொல்ல மாறி மாறி பிரச்சனை உருவானது. அப்போது ஓபிஎஸ்ஐ இபிஎஸ் முன்பாக உட்கார வைத்து பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தப்பட்டது.
கூட்டணி முடிந்தது-அதிமுகவும் முடிந்தது
இதற்கெல்லாம் சாட்சியாக கூடவே நான் இருந்தேன். அவர்கள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது ரொம்ப சாதனை செய்ததாக நினைத்துக் கொள்ள வேண்டாம். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது மாநிலத்தில் ஆளுங்கட்சியாக திமுக உள்ளது. மத்தியில் ஆளுங்கட்சியாக பாஜக உள்ளது. இதில் அதிமுக எங்கே உள்ளது என கேள்வி எழுப்பினார். கூட்டணி முடிந்தது முடிந்தது என்றால் அதிமுகவும் இன்றுடன் முடிந்தது. அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என எச்.ராஜா ஆவேசமாக கூறினார்.
இதையும் படியுங்கள்