இனி எந்த பிரச்சனை வந்தாலும் சந்திக்க தயார்..! அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ் பேசியது என்ன.?

By Ajmal Khan  |  First Published Sep 26, 2023, 6:07 AM IST

பா.ஜ.க.வுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை எனவும், கட்சியின் நிலைப்பாட்டை சிறுபான்மையினர் மக்களை சந்தித்து தெரிவியுங்கள் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.


அதிமுக- பாஜக கூட்டணி முறிவு

தமிழகத்தில் அதிமுக- பாஜக இடையே கடந்த 4 வருடங்களுக்கு மேல் கூட்டணியாக செயல்பட்டு வந்தது. இந்தநிலையில் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் ஜெயலலிதா தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து பாஜகவுடனான கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் அறிவித்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைப்பெற்றது. 

Tap to resize

Latest Videos

தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக

இந்த கூட்டத்தில் பா.ஜ.க உடனான கூட்டணி தொடரலாமா என மாவட்ட செயலாளர்களிடத்தில் தனி தனியாக  கருத்துகள் கேட்கப்பட்டது. கூட்டணி தொடர வேண்டாம் என மாவட்ட செயலாளர்கள் ஒருமித்தமாக தெரிவித்ததையடுத்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க உடன் இனி கூட்டணி இல்லை என மூன்று முறை அறிவித்தார்.

 அதனை தொடர்ந்து பா.ஜ.க கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பா.ஜ.க மாநிலத் தலைமை, மதுரையில் அதிமுக நடத்திய மாநில மாநாட்டை சிறுமைப்படுத்தும் விதத்தித்திலும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றி அவதூறாக பேசி வருவது அதிமுக தொண்டர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளதாகவும்,  தொண்டர்களின் விருப்பத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எந்த பிரச்சனை வந்தாலும் சந்திக்க தயார்

முன்னதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2024 நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல 2026 சட்டமன்ற தேர்தல் உட்பட பா.ஜ.க உடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை எனவும், கூட்டணி முறிவால் இனி எந்த பிரச்சனை வந்தாலும் சந்திக்க தயார் என பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைப்போம். பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகியதை சிறுபான்மை மக்களை சந்தித்து கட்சியின் நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் கூட்டணி முறிவு குறித்து தொண்டர்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். தொண்டர்களிடத்தில் எடுத்து சொல்லுங்கள் என மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை விரிவு படுத்துங்கள் எனவும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படியுங்கள்

நன்றி மீண்டும் வராதீர்கள்: முறிந்தது அதிமுக - பாஜக கூட்டணி!

click me!