கோவை என்மண் என் மக்கள் பயணத்தில் அதிமுக குறித்து வாய் திறக்காத அண்ணாமலை

By Velmurugan s  |  First Published Sep 26, 2023, 8:41 AM IST

என் மண் என் மக்கள் பயணத்தில் அதிமுக, திமுக என இருகட்சி தலைவர்களையும் விமர்சித்துவந்த அண்ணாமலை கூட்டணி முறிவு என அறிவித்த பின்னர் அதிமுக குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பாஜகவின் என் மண், என் மக்கள் யாத்திரை கோவை கணபதி பகுதியில் துவங்கி இடையர்பாளையம் பகுதியில் நிறைவடைந்தது. இந்த யாத்திரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடன் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

அப்போது பேசிய அண்ணாமலை, “கோவை பாஜகவின் கோட்டை. பாஜக வேறு இடத்தில் வியர்வை கொடுத்து வளர்த்தது என்றால், கோவையில் ரத்தத்தை கொடுத்து வளர்த்தது. கோவையில் அனைத்து தரப்பு மக்களும் என் மண், என் மக்கள் யாத்திரைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 9 ஆண்டு கால பாஜக ஆட்சியில் கோவைக்கு பல வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி கொடுத்துள்ளார். நாடு வளர்ச்சியடைந்து வருகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

ஏழை மனிதர்களுக்காக மத்திய அரசு வேலை செய்கிறது. சுத்தமான அரசியலை செய்ய எந்த பணமாக இருந்தாலும், பயனாளர்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படுகிறது. பிரதமர் மோடி கரத்தை பலப்படுத்த நம்மாலான பணிகளை செய்ய வேண்டும். 2024 தேர்தல் இந்தியாவிற்கான தேர்தல். தனி மனிதனுக்கான தேர்தல் அல்ல. மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும். 2028ல் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக வளரும். பாஜக நேர்மையான அரசியலை நடத்தி காட்ட முடியும் என நிரூபித்து காட்டியுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் பாஜக மீது ஊழல் புகார்களை சொல்லி வருகிறார். திமுக அரசின் ஊழலுக்கு முதலமைச்சர் செல்ஃப் சர்டிபிகேட் தருகிறார். திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்தியாவில் இதுபோன்ற ஊழல் அமைச்சரவையை பார்த்திருக்க முடியாது. தற்போது மகனுக்கும், மருமகனுக்குமான ஆட்சி நடக்கிறது. அதிகாரிகள் அவர்களுக்கு வேலை செய்கிறார்கள். தராசு தட்டில் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியையும், இன்னொரு பக்கம் ஊழல் ஆட்சியையும் மக்கள் வேறுபடுத்தி பார்க்கிறார்கள். 2024 தேர்தல் வளர்ச்சிக்கான தேர்தல். தலை எழுத்தை தீர்மானிக்கும் தேர்தல். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 39க்கு 39 அனுப்ப வேண்டியது நமது கடமை. பிரதமர் மோடி தமிழில் சரளமாக பேசினால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்துவிடும்.

மண்ணை, மக்களை, கலாசாரத்தை மோடி நேசிக்கிறார். பாராளுமன்ற தேர்தலில் கோவை நரேந்திர மோடி பக்கம் நிற்கும். திமுக ஆட்சிக்கு வரும் போது எல்லாம் தீவிரவாதம், மின்வெட்டால் கோவையின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. கோவை வளர்ச்சிக்கு எதிரான கட்சி திமுக. 50 சதவீதம் வரை மின்சார கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியுள்ளது. பீக் ஹவர் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்தியுள்ளார்கள். சிறு தொழிற்சாலைகளை திமுக ஆட்சி நசுக்கிவிட்டது. 

கோவையில் நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்திற்கு கூட்டம் வருகிறது. கட்சிக்கு கூட்டம் வரவில்லை என பேசியிருக்கிறார். 2021ல் சினிமாவில் யார் நடிக்கிறார்கள், நிஜத்தில் யார் நடிக்கிறார்கள் என்பதை உணர்ந்து வானதி சீனிவாசனை மக்கள் வெற்றி பெற வைத்தார்கள். கமல்ஹாசன் நன்றாக நடிப்பதை பார்க்க விக்ரம் படத்திற்கு கூட்டம் வருகிறது. திமுகவை தலைகீழாக எதிர்த்த கமல்ஹாசன், பணத்திற்கான உதயநிதி ஸ்டாலின் சொல்லியபடி நடிக்கிறார். 

கமல்ஹாசன் கால் தூசிக்கு உதயநிதி ஸ்டாலின் சமமா? கமல்ஹாசன் தன்மானத்தை உதயநிதி மற்றும் ரெட் ஜெயிண்ட்ஸ் மூவிசிடம் அடகு வைத்து விட்டு கோவையில் போட்டியிடுவதாக சொல்கிறார்.  பெரும்பாலான பெண்களுக்கு உரிமை தொகை வரவில்லை. பல வரிகளை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. தமிழகத்தை கடன்கார, குடிகார மாநிலமாக திமுக‌ அரசு மாற்றியுள்ளது. திமுக சனாதன தர்மம், இந்து தர்மத்திற்கு எதிரானது. மருதமலை முருகன் கோவிலுக்கு சின்னப்ப தேவர் தான் மின்சாரம் வாங்கி கொடுத்தவர். திமுக மின்சாரம் கொடுக்கமால் வைத்திருந்தது. எம்.ஜி.ஆரை சந்தித்து மருதமலை முருகன் கோவிலுக்கு மின்சாரம் வாங்கி கொடுத்தார்.

சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. தமிழகத்தில் பாஜகவினர் 400 பேர்  புகார் அளித்து பட்டத்து இளவரசர் மீது 1 வழக்கும் இல்லை. சனாதனத்தை இழிவுபடுத்திய திமுக வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வரலாறு காணாத வகையில் டெபாசிட் இழந்து தோற்க வேண்டும். சனாதனம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தண்டனை தருவார்கள். 33% மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுத்ததால் பிரதமரை கடவுளாக பார்க்க வேண்டும். கோவையை தொடர்ந்து பாஜக, ஆன்மிகம், நேர்மை கோட்டையாக வைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். அதிமுக, பாஜக கூட்டணி முறிந்த நிலையில், அண்ணாமலை அதிமுகவை விமர்சித்தோ, கூட்டணி குறித்தோ ஒரு வார்த்தை கூட பேசாமல் திமுகவை மட்டுமே விமர்சித்து உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!