ADMK – BJP: எடப்பாடியை கூல் பண்ணும் அண்ணாமலை...? பேச்சுவார்த்தையில் ஆப்சென்ட் ஆன நயினார் நாகேந்திரன்

By manimegalai aFirst Published Jan 29, 2022, 8:00 PM IST
Highlights

அதிமுக கூட்டணியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பேச்சுவார்த்தையில் நயினார் நாகேந்திரன் இல்லாமல் போனது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

சென்னை: அதிமுக கூட்டணியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பேச்சுவார்த்தையில் நயினார் நாகேந்திரன் இல்லாமல் போனது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் களம் இறங்கி உள்ளன. திமுக கூட்டணியில் இதுவரை எந்த உரசலும் இருப்பதாக செய்திகள் வராத நிலையில் அதிமுகவுடன் இன்று பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது.

அதிமக தரப்பில் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னையில் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் பாஜக சார்பில் தமிழக தலைவர் அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கிட்டத்தட்ட 4 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அண்ணாமலை. அவர் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக ஒரு வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது. பேச்சுவார்த்தையை முடித்துள்ளோம்.

பேச்சுவார்த்தை மேலும் தொடரும். இன்றைய பேச்சுவார்த்தையில் எவ்வித சிக்கலும் கிடையாது. ஆளும் திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எத்தனை சதவீதம் சீட் வேண்டும் என்று கோரிக்கை வைக்க வில்லை.

பாஜக வலுவோடு உள்ளது, 2011ம் ஆண்டும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறோம், கூட்டணியாகவும் ஜெயித்துள்ளோம் என்று கூறி இருக்கிறார். அவரின் கருத்துப்படி பேச்சுவார்த்தை தொடரும் என்று கூறப்பட்டாலும், கள நிலவரம் வேறு மாதிரியாக தான் உள்ளது என்கின்றனர் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள்.

அதற்கு அவர்கள் கூறும் காரணம்.. நயினார் நாகேந்திரன். கடந்த 9 மாதத்துக்கு முன் அவர் அதிமுக பற்றி பேசிய விஷயங்கள், இப்போது சென்னையில் பாஜக போராட்டத்தின் போது சொன்ன கருத்துகள் இரண்டையும் ஒப்பிட்டு சில விஷயங்களை கூறி இருக்கின்றனர்.

9 மாதங்கள் முன் அதிமுக ஒரு காட்டாற்று வெள்ளம் என்று கூறிய அதே நயினார் நாகேந்திரன் இப்போது, அதிமுக தலைமையை பற்றியும், அதன் செயல்பாடுகளையும் பற்றி குறிப்பிட்டு சட்டசபையில் அதிமுக ஆண்மையுடன் செயல்படவில்லை என்று விமர்சித்துள்ளார். இந்த விவரங்களை சுட்டிக்காட்டும் அதிமுகவினர், அதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் + வருத்தம் தெரிவித்து இருந்தாலும் இன்னமும் சமாதானம் ஆக நிலையில் தான் இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இந்த கோபத்தின் தாக்கம் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை கூட்டத்திலும் எதிரொலித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை, கோவை, நெல்லை என பல முக்கிய மாவட்டங்களை பாஜக கேட்டதாகவும், இட பங்கீடு தொடர்பாக பாஜக தரப்பில் வைக்கப்பட்ட எந்த கோரிக்கையையும் அதிமுக தரப்பு ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 4 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் இல்லை என்று அதிமுகவில் இருந்து தகவல்கள் கசிந்து இருக்கின்றன. தஞ்சை பள்ளி மாணவி விவகாரத்தை பாஜக கையாண்ட விதத்தையும், அதிமுக மீதான விமர்சனத்தையும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரால் இன்னமும் பொறுத்துக் கொள்ள முடியவில்லையாம்.

அதன் காரணமாகவே உள்ளாட்சி தேர்தலில் பாஜக கேட்ட இடங்களை தர அதிமுக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையில் எந்த தருணத்திலும் அதிருப்தி வந்து விடக்கூடாது என்பதற்காக தான் நயினார் நாகேந்திரன் இந்த கூட்டத்தில் இடம்பெறவில்லை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். நயினார் நாகேந்திரனை பார்க்கும் தருணத்தில் அதிமுக தலைமையின் கோபம் மேலும் உச்சமாகும் என்பதால் அவரை பாஜக தலைமை தவிர்த்துவிட்டதாகவும் தெரிகிறது.

ஒட்டுமொத்தமாக இன்றைய பேச்சுவார்த்தையில் எந்த உறுதியான முடிவும் எட்டப்படவில்லை என்றும், தமிழக பாஜக மீது அதிமுக தலைமை கடும் கோபத்தில் இருப்பதால் கூட்டணியில் விரிசல் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஒரு வேளை பாஜக டெல்லி தலைமையின் தூதர்களிடம் இருந்து ஏதேனும் சிக்னல்கள் வந்தால் மட்டும் அதிமுகவின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கும் என்று நடப்பதை நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஆக மொத்தம்… இப்போது கூட்டணிதான்… ஆனால், அடுத்து என்ன என்பது நிச்சயமாக தெரியாது என்கின்றனர் அனைத்தையும் உற்று நோக்குபவர்கள்…!!

click me!