
ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாநிலங்களவையில் ஓபிஎஸ் அணி எம்பிக்கள் மைத்ரேயன் மற்றும் லட்சுமணன் மற்றும் சசிகலா புஷ்பா ஆகியோர் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது என்றும் அது குறித்து நீதி விசாரணை மற்றும் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பு எம்பிக்கள் சில நாட்களுக்கு முன்பு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
மேலும் இது தொடர்பாக கடந்த 8 ஆம் தேதி சென்னை மற்றும் தமிழகம் முழுகதும் 36 இடங்களில் ஓபிஎஸ் அணியினர் உண்ணாவிதப் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் மாநிலங்களவை இன்று கூடியதும் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன், லட்சுமணன், சசிகலா புஷ்பா ஆகிய மூவரும் எழுந்து சென்று அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
தங்கள் கைகளில் ஜெயலலிதாவின் மரணம் குறித்த பதாகைகளை எந்தி கடும் அமளியில் ஈடுபட்டனர். உடனடியாக இது குறித்து விவாதிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும்இ சிபிஐ விசாரயை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அப்போது அவைத் தலைவர் குரியன் எழுந்து நின்று அவர்களை தயவு செய்து இருக்கையில் அமருங்கள் என கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.
ஆனாலும் தொடர்ந்து அவர்கள் அமளியில் ஈடுபட்டபோது சசிகலா தரப்பு எம்.பி.விஜிலா சத்யானந்த், அவர்களுக்கு பேசுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என கூச்சலிட்டார்.
தொடர்ந்து இரு தரப்பினரும் மாற்றி, மாற்றி அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது, ஒரே கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் கடுமையாக மோதிக் கொண்டதை மற்ற மாநிலங்களைச் சேர்ந்த எம்பிக்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.