படுக்கையறையில் மர்ம நபர்கள்.. சசிகலா புஷ்பாவுக்கு நிபர்ந்தனை ஜாமின்.. உயர் நீதி மன்றம் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Feb 17, 2022, 12:22 PM IST
Highlights

இந்த  வழக்கில், காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் என அஞ்சி, முன் ஜாமீன் வழங்கக்கோரி முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

கொலை மிரட்டல் விடுத்ததாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள தனது வீட்டில் ராஜா மற்றும் அமுதா ஆகியோருடன் சேர்ந்து தன்னை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் எம்.பி., சசிகலா புஷ்பாவுக்கு எதிராக அவரது கணவர் ராமசாமி, ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் அளித்திருந்தார். இப்புகாரின் அடிப்படையில், சசிகலா புஷ்பா உள்பட மூன்று பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த  வழக்கில், காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் என அஞ்சி, முன் ஜாமீன் வழங்கக்கோரி முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், தொழில் சம்பந்தமாக தன்னை சந்திக்க வந்த இருவரும் புறப்பட 11 மணிக்கு மேலாகி விட்டதாகவும், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் வீட்டில் தங்க அனுமதித்ததாகவும், தனக்கு எதிராக பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தனது கணவர் ராமசாமி தான், தன்னை மிரட்டியதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன் விசாரணைக்கு வந்த போது, புலன் விசாரணை நிலுவையில் உள்ளதால் சசிகலா புஷ்பாவுக்கு முன் ஜாமீன் வழங்க கூடாது என காவல்துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள், ஜாமீனில் விடுதலை செய்யக் கூடிய பிரிவுகள் எனக் கூறிய நீதிபதி பொங்கியப்பன், 25 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனிலும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அடுத்த 15 நாட்களுக்கு ஜெ.ஜெ. நகர் போலீசில் ஆஜராக வேண்டும் எனவும், சாட்சிகளை கலைக்க கூடாது, தலைமறைவாகக் கூடாது எனவும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
 

click me!