
தொடர்ந்து இஸ்லாமியர்களை அவமரியாதை செய்யும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி வலியுறுத்தியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது வாணியம்பாடி தொகுதி மக்களை அச்சுறுத்தும் வகையில் அவர் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது என அந்த அமைப்பின் மாநில தலைவர் தடா ரஹீம் எச்சரித்துள்ளார்.
எவ்வளவு சீரியஸான மேட்டர் ஆக இருந்தாலும் அதை நக்கலும் நையாண்டியும் ஆக பேசக்கூடியவர் தான் திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன். தன்னைச் சுற்றி இருப்பவர்களை கலகலப்பாக வைத்துக் கொள்பதில் துரைமுருகனுக்கு நிகர் துரைமுருகன் என திமுகவினரேஅவரை கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். பல பேட்டிகளின் போதும் அவரின் நக்கல் பேச்சுக்களை தமிழகமே அறியும். ஆனால் சில நேரங்களில் அவரின் வரம்பு மீறிய பேச்சு திமுகவுக்கே பெரும் தலைவலியை ஏற்படுத்திவிடுவதும் உண்டு. துரைமுருகனுக்கு வாய் துடுக்கு அதிகம் என்று பல கூட்டணிக் கட்சித் தலைவர்களே விமர்சிக்கும் அளவிற்கு அவரின் பேச்சுக்கள் இருந்து வருவதை எவரும் மறுக்க முடியாது. காமெடியாக பேசுவது போல அதில் பொடி வைத்து பேசுவது துறைமுகனின் வாடிக்கை என்றும் கூறலாம். அதனால் அதை சாதாரணமாகவும் எடுத்துக் கொள்ளமுடியாது.
அதாவது வாழைப்பழத்தில் ஊசி இறங்குவது போல என்றும் அதை கூறலாம், சமீபத்தில் அப்படி அவர் பேசிய பேச்சுக்கள் இஸ்லாமிய சமூகத்தை கொதிப்படைய வைத்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வரும் அவர் நகைச்சுவைக் கதைகளை சொல்லி அனைவரையும் சிரிக்க வைக்கிறார். அவரும் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார். அதே நேரத்தில் எதிர்க் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் பகிரங்க மிரட்டல் விடுக்கும் வகையில் பரப்புரை செய்து வருகிறார். ஏன், ஒரு கட்டத்தில் வாக்காளர்களையும் மிரட்டும் வகையில் அவர் பேச்சுக்களில் இருந்து வருகிறது. இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வாணியம்பாடியில் பரப்புரையில் ஈடுபட்டு அவர் நீங்கள் வாக்களிக்க வில்லை என்றால் இந்த வாணியம்பாடிக்கு எந்த சலுகையும் செய்யப்படாது.
ஐந்து வருடத்திற்கு ஓரங்கட்டி விடுவோம் என்று அவர் பேசியுள்ளார். இதுதான் இப்போதும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்நிலையில்தான் தொடர்ந்து இஸ்லாமியர்களையும் இஸ்லாமிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் வகையில் துரைமுருகன் பேசி வருகிறார் என குற்றம் சாட்டியுள்ள இந்திய தேசிய லீக் கட்சி துரைமுருகன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் தடா ரகீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவரம் பின்வருமாறு:- திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன் அவர்கள் உடனே பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் அவரது வீடு முற்றுகை போராட்டம் நடத்தப் படும்.
திமுகவின் மூத்த அமைச்சர் துரைமுருகன் அவர்களின் ஆணவ பேச்சு தொடர்வதை உடனே நிறுத்த வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக எச்சரிக்கிறோம். ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் திமுகவை சேர்ந்த முஸ்லிம் ஒருவரை பார்த்து ' ஏ தொப்பி ' என அழைத்து கேவலமான சிரித்தது உட்பட அடிக்கடி முஸ்லிம்களை சீண்டி பார்ப்பது தொடர் கதையாகி வரும் நிலையில், வாணியம்பாடியில் நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் துரைமுருகன் திமுக வெற்றி பெறாவிட்டால் வாணியம்பாடி நகரம் அடுத்த 5 ஆண்டுகள் புறக்கணிக்கப்படும் என எச்சரித்துள்ளர்.
மூத்த அமைச்சரும் பொதுச்செயலாளருமான துரைமுருகன் அவர்கள் தொடர்ந்து முஸ்லிம்களை கேவலமான முறையில் விமர்சனம் செய்வதையும் முஸ்லிம்களை எச்சரிப்பதையும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். அமைச்சர் துரைமுருகன் அவர்கள் வாணியம்பாடி வாக்காளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்றாலும் அங்கு வாழும் பெரும்பான்மை முஸ்லிம்களை அச்சமூட்டும் வகையில் பேசியதை உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் இந்திய தேசிய லீக் கட்சி வேலூர் மாவட்டம் சார்பாக காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீடு முற்றுகை போராட்டம் நடத்தப் படும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம். என அதில் கூறப்பட்டுள்ளது.