என் தந்தை, கருணாநிதியின் பக்தர்.. முதல் ஆளாக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்.. சட்டப்பேரவையில் நெகிழ்ச்சி.

By Ezhilarasan BabuFirst Published Aug 24, 2021, 11:28 AM IST
Highlights

என் தந்தை தீவிரமாக கலைஞர் கருணாநிதி பக்தர், அவருடைய பெட்டியில் மனோகரா, பராசக்தி கதைகள் இருக்கும், அவற்றை மனப்பாடமாக ஒப்பிப்பார். அவர் இல்லாத நேரத்தில் அதை எடுத்து படித்துள்ளோம். 

கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என முதல்வரின் அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டப் பேரவை துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் மனதார வரவேற்று பாராட்டி உள்ளார்.

தன் தந்தை தீவிர கலைஞரின் பக்தர் என்றும், கருணாநிதி அவர்களின் ஒவ்வொரு வசனங்களும் சமூகத்தை முன்னேற்ற எப்போதும் துணை நின்றுள்ளது என்றும். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவர் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது, தேர்தல் நேரத்தின்போது திமுக ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்துள்ளதால், இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது. பட்ஜெட் தாக்கலின் போதே, நிதி நெருக்கடி காரணமாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும் என்றும், ஆனால் உறுதியாக நிறைவேற்றப்படும் என்றும், முதல்வர்வாக்குறுதி அளித்துள்ளார். 

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் முதல்வர் உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் நினைவிடம் அமைக்கப்படும் என்றார். சுமார் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி செலவில் அது நிர்மாணிக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். கருணாநிதியின் வாழ்க்கை சிந்தனை குறித்த நவீன ஒளி படங்களுடன் அந்த நினைவிடம் அமைய உள்ளது என்றும், தமிழக முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகித்த தலைவர் கருணாநிதிக்கு சென்னையில் நினைவிடம் கட்டப்படும் என்றார். 

இந்நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்பை  எதிர்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்று கூறியதாவது, கலைஞருக்கு நினைவிடம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி, எப்போதும் வரலாற்றில் கலைஞரின் பெயர் நிலைத்து நிற்கும், இதை முழுமனதோடு ஒருமனதாக வரவேற்கிறோம், ஐம்பதாண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி, பல்வேறு சிறப்பு மிக்க சட்டங்களை கொண்டு வந்தவர், அவருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு உள்ளபடியே மகிழ்ச்சியை தருகிறது. வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை மனதார வரவேற்று பாராட்டுகிறேன். 

என் தந்தை தீவிரமாக கலைஞர் கருணாநிதி பக்தர், அவருடைய பெட்டியில் மனோகரா, பராசக்தி கதைகள் இருக்கும், அவற்றை மனப்பாடமாக ஒப்பிப்பார். அவர் இல்லாத நேரத்தில் அதை எடுத்து படித்துள்ளோம். அவரின் வசனத்தில் அனல் பறக்கும், பின்னடைவில் உள்ள சமூகத்தை முன்னேற்ற அது எப்போதும் துணை நின்றுள்ளது என்றார். திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்று பேசியிருப்பது இரு கட்சி தொண்டர்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

click me!