
ஒரு வார காலம் டெல்லியில் முகாமிட்டும் பாஜக தரப்பில் இருந்து சாதகமான எந்த பதிலும் கிடைக்காத நிலையில் மறுபடியும் சினிமாவில் நடிக்கும் முடிவிற்கே குஷ்பு வந்துவிட்டாராம்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகை குஷ்பு வெளியிட்ட ஸ்லிம் ஃபிட் புகைப்படங்கள் படு வைரல். ரசிகர்கள் சிலர் மேடம் என்னை உங்களது கணவராக ஏற்றுக் கொள்வீர்களா என கேட்க வைக்கும் அளவிற்கு செம பிட்டாக மாறிப்போயிருந்தார் குஷ்பு. திரையுலகை சேர்ந்தவர்களும் அட நம்ம கொழு கொழு குஷ்புவா இது? என்று ஆச்சரியத்துடன் கேட்க ஆரம்பித்துள்ளனர். அந்த அளவிற்கு சுமார் மூன்று மாத கால கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு குஷ்பு உடலை குறைத்துள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக குஷ்பு திடீரென கட்சி மாற காரணமே கழுத்தை நெறிக்கும்அளவிற்கு அதிகமான கடன் தான் என்கிறார்கள். எடுத்த திரைப்படங்கள் தோல்வி, சீரியல்களில் போட்ட பணம் திரும்பி வராதது என பெரும சிக்கலில் குஷ்பு தவித்துக் கொண்டிருந்தார். அதில் இருந்து காப்பாற்றுவதாக கூறியே குஷ்புவுக்கு சுந்தர் சி மூலம் தூண்டில் போட்டு பாஜக மேலிடம் கொத்திக் கொண்டு போனது. அதே வேகத்தில் ஆயிரம் விளக்கு தொகுதியிலும் குஷ்புவிற்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்ததோடு தேர்தல் செலவுக்கும் கணிசமான தொகை கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த தொகையை சல்லி பைசா பாக்கி இல்லாமல் ஆயிரம் விளக்கு தொகுதியிலேயே செலவழித்துள்ளார் குஷ்பு. ஆனால் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானது. ஆனால் தேர்தலில் தோல்வி அடைந்த எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி, அண்ணாமலைக்கு மாநில தலைவர் பதவி என பாஜக தாராளம் காட்ட குஷ்புவும் டெல்லி சென்று பசையுள்ள பதவிக்காக தூண்டில் போட்டு காத்திருந்தார். அந்த வகையில் அவருக்கு தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழக பாஜகவிற்கு தேர்தல் பொறுப்பாளராக இருந்த மத்திய அமைச்சர் ஒருவர் குஷ்புவிடம் வாக்குறுதி கொடுத்தாகவும் சொல்லப்பட்டது. ஆனால் குஷ்பு டெல்லி சென்று வந்த பல நாட்கள் கடந்த நிலையிலும் அது தொடர்பான எந்த அறிவிப்பும் வரவில்லை. இதே போல் அண்ணாமலை பாஜக தலைவரான பிறகு தமிழகத்தில் நடிகர், நடிகைகளுக்கான முக்கியத்துவத்தை அவர் குறைத்து வருகிறார். இதனால் தற்போதைய சூழலில் பாஜக உதவும் என்று நம்பிக் கொண்டிருக்காமல் மறுபடியும் சினிமாவில் திறமை காட்ட குஷ்பு தயாராகி உள்ளார்.
சினிமா மட்டும் அல்லாமல் டிவி நிகழ்ச்சிகள், சீரியல்கள், ஓடிடி தளங்கள் என வாய்ப்பு உள்ள இடங்களை தேடி தனது பிஆர்ஓக்களை குஷ்பு தூது விட்டுள்ளதாக சொல்கிறார்கள். இதற்கு வசதியாகவே தனது உடல் எடையை குறைத்து குஷ்பு பழைய குஷ்புவாக திரும்பி வந்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.