ஒரே நாடு ஒரே தேர்தல்..! அறிவியல் தேர்வையும், கணித தேர்வையும் ஒன்றாக எழுத முடியுமா.? முரசொலி கடும் விமர்சனம்

By Ajmal KhanFirst Published Jan 18, 2023, 10:03 AM IST
Highlights

 சொந்தக் கட்சியில் ஒரே ஒரு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக் கூட துப்பு இல்லாத பழனிசாமிதான் இந்தியாவுக்கே அறிவுரை சொல்லக் கிளம்பி இருக்கிறார். அவர் ஆதரிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் சர்வ நாசம், சர்வ மோசமாகத்தான் இருக்க முடியும் என முரசொலி விமர்சித்துள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் கருத்து கேட்ட நிலையில் இது தொடர்பாக பாஜக மற்றும் அதிமுகவை விமர்சித்து திமுகவின் நாளேடான முரசொலி தலையங்கம் எழுதியுள்ளது. அதில், பா.ஜ.க.வுக்குத் தெரிந்த ஒரே வார்த்தை 'ஒரே'தான்! எதற்கெடுத்தாலும் 'ஒரே சேர்த்துவிட்டால் தேசம் முழுக்க ஒன்றாக ஆக்கிவிட்டதாக அவர்களுக்கே ஒரு நினைப்பு! ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே கலாச்சாரம், ஒரே தேர்வு ஒரே தேர்தல் ஒரே வரி ஒரே உரம் - என்று ஒரே பாட்டைப் பாடி, அனைத்தையும் திசை திருப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

எல்லா நோய்க்கும் அவர்கள் வைத்திருப்பது 'ஒரே’ மருந்துதான். தேசத்தைச் சொல்லி ஏமாற்றுவது. திசை திருப்புவது. 'நாடு முழுக்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப் போகிறோம்' என்பது அடுத்த பசப்புகள். சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடந்தது. பா.ஜ.க. ஆட்சி அமைந்துள்ளது. அதனைக் கலைக்கப் போகிறார்களா? இன்னும் பல மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அதைக் கலைக்கப் போகிறார்களா? இதனை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களே ஏற்பார்களா? நடந்து முடிந்த மாநிலங்களைக் கலைத்து தேர்தல் நடத்துவதன் மூலமாக எத்தனை ஆயிரம் கோடி மீண்டும் செலவாகும்?

தமிழ்நாட்டிற்கு தனி கொடி வேண்டும்..! பாஜகவினரை அலறவிடும் திமுக எம்எல்ஏவின் கோரிக்கை

பாஜக நிதி கொடுக்குமா.?

பா.ஜ.க.வுக்கு தெரிந்த பாதை என்பது கொல்லைப்புற வழியாகும். சட்டமன்றங்களில் தான் வெற்றி பெற முடியவில்லை என்றால் ஆளும் கட்சி உறுப்பினர்களை இழுத்து, ஆட்சியைக் கலைப்பது அதற்குத் தெரிந்த வழியாகும். அப்படி கவிழ்க்கப்பட்ட ஆட்சிக்கு எப்போது தேர்தல் நடத்துவீர்கள்? ஐந்து ஆண்டுகள் கழித்து. நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்தா? அதுவரை அந்த மாநிலத்தை ஆளப் போவது யார்? அந்த மாநிலத்துக்குத் தேர்தல் நடத்துவதற்காக, ஒருவேளை நாடாளுமன்றத்தையே கலைத்து விடுவார்களா? அப்போது ஆகும் செலவை. பா.ஜ.க.வின் பல்லாயிரம் கோடி கட்சி நிதியில் இருந்து கொடுப்பார்களா?

உள்ளாட்சி தேர்தலையும் நடத்துமா.?

குஜராத் மாநில சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலையே இரண்டு கட்டங்களாகத்தான் நடத்தினார்கள். ஒரே கட்டமாக நடத்த முடியவில்லை. ஒருமாநில சட்டமன்றத் தேர்தலையே ஒரே கட்டமாக நடத்த முடியாத நாட்டில்தான் அனைத்து மாநில சட்டமன்றத் தேர்தலையும் - நாடாளுமன்றத் தேர்தலையும் சேர்த்து நடத்தப் போகிறார்களாம்! உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதால் தனியாக செலவாகிறதே? அதனையும் நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தலோடு சேர்த்து நடத்த வேண்டியதுதானே? பல்லாயிரம் கோடியை ஒவ்வொரு மாநில அரசும் சேர்ந்து செலவு செய்கிறதே? இதனை மிச்சம் பிடிக்க வேண்டாமா?

ஆளுநர் தேவையில்லாமல் அரசியல் பேசுகிறார்.. ஓபிஎஸ் சொல்லியதுதான் எங்கள் கருத்தும்.. டிடிவி.தினகரன்..!

திமுக கடும் எதிர்ப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது. நடைமுறை சாத்தியமற்றது' என. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்த முதலமைச்சரின் கடிதம் டெல்லியில் தேசிய சட்ட ஆணையத்தில் நேரில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் இந்த கடிதத்தை தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன், சட்ட ஆணையத்தில் நேரில் வழங்கினார்.  மக்களவையாக இருந்தாலும். சட்டமன்றப் பேரவையாக இருந்தாலும் அதன் காலம் என்பது ஐந்து ஆண்டுகள். அதனை முன்கூட்டியே கலைக்க முடியாது என்பதையும் முதலமைச்சர் அவர்கள் அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டி இருக்கிறார். ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்ற பேரவைக் காலமானது அதிகரிக்கப்பட வேண்டும். அல்லது குறைக்கப்பட வேண்டும். இதன் மூலமாக மாநிலங்களில் குழப்பமே ஏற்படும்.

இபிஎஸ் ஆதரிப்பது சர்வ நாசம்

இரண்டு தேர்தல்களின் தன்மையும் வேறுவேறு. தேசியப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தருவது நாடாளுமன்றத் தேர்தல். மாநில நலன்களை கவனத்தில் கொள்ள வேண்டியது சட்டமன்றத் தேர்தல். இரண்டையும் குழப்பிக் கொள்ள முடியாது. எல்லாம் தேர்வு தானே என்று அறிவியல் தேர்வையும். கணக்கையும் ஒரே நேரத்தில் எழுதச் சொல்ல முடியுமா? நேரமும். பணமும் மிச்சம் ஆகுமே?! ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரித்து பழனிசாமி கடிதம் எழுதி இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. சொந்தக் கட்சியில் ஒரே ஒரு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக் கூட துப்பு இல்லாத பழனிசாமிதான் இந்தியாவுக்கே அறிவுரை சொல்லக் கிளம்பி இருக்கிறார். அவர் ஆதரிக்கும் எந்த திட்டமாக இருந்தாலும் சர்வ நாசம், சர்வ மோசமாகத்தான் இருக்க முடியும்! என அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

இபிஎஸ்யை காலி செய்து, இரட்டை இலையை முடக்கி விடுவேன் என எச்சரித்த அண்ணாமலை.? கிஷோர் கே சாமி பரபரப்பு தகவல்

click me!