கைலாசா மன்னனாக நித்யானந்தா..! காசி தமிழ் சங்கமத்திற்கு அழைக்காதது ஏன் ..? முரசொலி கிண்டல்

By Ajmal Khan  |  First Published Nov 21, 2022, 1:08 PM IST

ஒரு நாட்டை சிருஷ்டித்து வாழ்ந்து கொண்டிருப்பவர் அந்த “அற்புத அவதாரம்' (!) நித்யானந்தாவை ஏன் இந்தச் சங்கமத்துக்கு அழைக்காமல் விட்டார்கள் என்பது புரியவில்லை!  என திமுக நாளிதழ் முரசொலி விமர்சித்துள்ளது.


காசி தமிழ் சங்கமம்

காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே தொன்மையான நாகரிக பிணைப்பையும் பல நூற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக, ஒருமாத கால ‘காசி தமிழ் சங்கமம்’நிகழ்ச்சி, வாரணாசியில் நடைபெற்று வருகிறது. கடந்த 17ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி டிசம்பர் 16ஆம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெறுகிறது. இதன் துவக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதனையடுத்து தமிழகத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் பல்வேறு கலைஞர்களை காசிக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் காசி தமிழ் சங்கத்தை விமர்சிக்கும் வகையில், முரசொலியில் கேள்வி பதில் வாயிலாக கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், 

Tap to resize

Latest Videos

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி..! இரண்டாவது ரயில் கோவையில் இருந்து புறப்பட்டது

கேள்வி :- காசியில் நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கமம் துவக்க விழா நிகழ்ச்சி எப்படி?

பதில்:- அச்சா... பகுத் அச்சா.. ஹை...! தமிழ்ச் சங்கமத் துவக்க விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துகூட இல்லையே! இந்தி - சமஸ்கிருதமிடையே தமிழ் நசுக்கப்பட்டு. மூச்சுத்திணறிக் கிடந்த காட்சியைத்தானே அங்கு காண முடிந்தது.

 கேள்வி : தமிழ் மடாதிபதிகளுக்கு தனிமேடை தந்து கவுரவப்படுத்தியது குறித்து என்ன கருதுகிறீர்கள்? 

பதில்: அதிலேகூட தமிழாய்ந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் தென்பட வில்லையே! ஒருவேளை இதைத்தான் ஆன்மிக அரசியல்' என்று கூறுகிறார்களோ என்னவோ? அதை விடுங்கள். இத்தனை மடாதிபதிகளை அழைத்து விழா நடத்தியவர்கள், எப்படி இன்னொரு முக்கியப் பிரமுகரைத் தவிர்த்தார்கள் என்பது விளங்கவில்லை. பிரதமர் பேசியபோது, காஞ்சிக்கும் - காசிக்கும் உள்ள ஆலயங்களின் ஒற்றுமை களை எடுத்துக் கூறினார். காசி விசுவநாதர். காஞ்சி ஏகாம்பர நாதரை எல்லாம் குறிப்பிட்டார். அந்த சிவனுக்காக ஒரு நாட்டையே சிருஷ்டித்துள்ளவர் அந்தப் பிரமுகர்! தமிழ்நாட்டு ஆளுநர் ரவி. மதம் சாராத நாடு இருக்க முடியாது என்று கூறியதற் கொப்ப ஒரு மதத்தை. ஆளுநர் ரவியும். பிரதமர் மோடியும். விரும்புகிறபடி நிறுவி ஒரு மதச்சார்பான நாட்டை உருவாக்கி ஆண்டு கொண்டிருப்பவர்! 

சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்து..! கிஷோர் கே சாமியை அதிரடியாக கைது செய்த போலீஸ்

அந்த நாட்டின் பெயரையே ‘கைலாசா' என்று வைத்து, தன்னையே சிவனின் மறு அவதாரமாக அறிவித்து, ஆட்சி புரிந்துகொண்டு முடிசூடா மன்னனாகக்கூட அல்ல: முடி சுமந்த மன்னனாக காட்சியளித்துக் கொண்டிருப்பவர்! இந்தியாவின் அரசியல் சட்டம்கூட, இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என்று கூறுகிறது: ஆனால். அவருடைய நாட்டில் அந்தப் பிரச்சினையே இல்லை! ஆளுநர் ரவி போன்றவர்களும், ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினரும் இந்தி KAILAAS யாவை எப்படி மாற்றி அமைக்க விரும்புகின்றனரோ அதுபோன்ற ஒரு நாட்டை சிருஷ்டித்து வாழ்ந்து கொண்டிருப்பவர் அந்த “அற்புத அவதாரம்' (!) நித்யானந்தாவை ஏன் இந்தச் சங்கமத்துக்கு அழைக்காமல் விட்டார்கள் என்பது புரியவில்லை! 

ஓர் அழைப்பு அனுப்பியிருந்தால் மறுநிமிடமே புஷ்பக விமானத்தை சிருஷ்டித்து அதிலே பறந்து வந்திருப்பாரே! அவரை ஏன் விட்டுவிட்டார்கள்: என்று தெரியவில்லை!. பிரபல நடிகர்கள் தாங்கள் பங்கேற்கும் விழாக்களில் மற்றொரு பிரபல நடிகர் பங்கேற்பதைத் தவிர்த்து விடுவார்கள்! மக்களின் கவனம் தங்கள் மீது மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில் தனிக் கவனம் செலுத்துவர்! ஒருவேளை பிரதமர் மோடி அப்படி நினைத்து விட்டாரா? நித்யானந்தா வந்திருந்தால். வந்திருந்த கூட்டத்தின் மொத்த கவனமும் அவரைச் சுற்றி போய் விடுமோ என்ற பயத்தில் விழா ஏற்பாட்டாளர்கள் தவிர்த்து விட்டார்களோ என்னவோ புரியவில்லை! என்ன இருந்தாலும் இத்தனை மடாதிபதிகள் அழைக்கப்பட்டிருந்தாலும். மதுரை ஆதினத்தின் மடாதிபதியாக சிறிது காலம் இருந்த நித்யானந்தா இல்லாதது அவரது பக்தர்களுக்கு ஒரு குறைதானே!

கேள்வி: மொத்தத்தில் காசி தமிழ்ச்சங்கம நிகழ்ச்சி? 

பதில்:தமிழ்ச்சங்கமத்தில், குறைந்தபட்சம். 'தென்னாடுடைய சிவனேபோற்றி எந் நாட்டவருக்கும் இறைவா போற்றி!..." என்ற பாடல்கூட ஒலிக்கவில்லை: "ஹரஹர மஹாதேவ்... ருத்ராய . ருத்ராய ...நமோ... சம்போ.. சம்போ.. சங்கரா.. சம்போ..." என்றும், “ஜனனி... ஜனனி..." என்றும்தானே பாடல்கள் கேட்டன!

அது தமிழ்ச்சங்கம நிகழ்ச்சி அல்ல; சமஸ்கிருதமும் இந்தியும், தமிழை 'சம்ஹாரம்' செய்த நீகழ்ச்சி... ஆட்டுக்கு மாலை சூட்டி பலிபீடத்துக்குக் கொண்டு செல்வதுபோல. தமிழைப் பலிகடாவாக்க திட்டமிட்டு நடத்தப்படும் சூழ்ச்சி!. என முரசொலி தனது கட்டுரையில் விமர்சித்துள்ளது.

இதையும் படியுங்கள்

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு..! சதி திட்டத்தின் பின்னனி என்ன..? ஷாரீக்கிடம் என்ஐஏ போலீசார் விசாரணை..?
 

click me!