சேலைகளில் மோடி- யோகி.. 2 லட்சம் புடவைகள் ரெடி.. பெண்களை கவர பக்காவாக பிளான் போட்ட பாஜக.

By Ezhilarasan BabuFirst Published Jan 25, 2022, 5:00 PM IST
Highlights

தற்போது 20 முதல் 24 உற்பத்தியாளர்கள் சூரத்தில் 200 முதல் 500 ரூபாய் வரை இந்த ஆர்டர்களை செய்து கொடுப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்தத் தேர்தல் புடவைகள் தயாரிக்க 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை செலவாகும், ஆனால் இவைகளின் சந்தை விலை 1000 முதல் 2,500 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநில தேர்தலில் பெண்களின் வாக்குகளை குறிவைக்கும் பாஜக, பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் உருவம் பதித்த புடவைகளை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக மொத்தம் 2 லட்சம் புடவைகள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும் முதற்கட்டமாக 50 ஆயிரம் புடவைகள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற உள்ளது. நாட்டிலேயே அதிக சட்டமன்ற தொகுதிகளை கொண்ட உ.பி தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. மீண்டும் உத்தரபிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.  பாஜகவுக்கு எதிர் முனையில் சமாஜ்வாடி, காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன. வழக்கத்துக்கு மாறாக பகுஜன் சமாஜ் கட்சி இந்த தேர்தலில் பெரிய அளவில் ஆர்வமின்றி உள்ளது. உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பெண்களின் வாக்குகளை கவர பாஜக பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில் புடவை மூலம் பெண்களின் இதயத்தை கவரும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. அந்த புடவைகளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. மோடி-யோகி ஜோடி புடவையில் தோன்றுவது இதுவே முதல் முறையாகும், அவற்றில் பாஜக வசனங்களும் அச்சிடப்பட்டுள்ளன.  கடந்த தேர்தல்களில் இருந்து இது மாறுபட்ட முயற்சியாக பார்க்கப்படுகிறது.

உ.பி, லக்னோ, கான்பூர், கோரக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய நான்கு நகரங்களில் இருந்து இதுவரை சுமார் 50 ஆயிரம் புடவைகளுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. சூரத்தில் வணிகம் செய்யும் கோரக்பூர் மற்றும் கான்பூரைச் சேர்ந்த இரண்டு வர்த்தகர்கள் உ.பியில் 40 மாவட்டங்களில் வணிகம் செய்யும் தங்கள் வியாபாரிகளின் மூலம் ஒரு லட்சம் புடவைகளை எந்த அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தப் புடவைகள் அனைத்தும் சூரத்தில் தயாரிக்கப்படுகின்றன, நாட்டிலேயே மலிவான விலையில் புடவைகள் அங்கு தயாரிக்கப்படுவதே அதற்கு காரணம். மேலும் ஓரிரு நாட்களில் மேலும்1 லட்சம் புடவைகளுக்கான ஆர்டர்கள் வரப் போவதாக கூறப்படுகிறது.  மீரட்டில் உள்ள புடவை ஷோரூமுக்கு சூரத்தில் இருந்து மோடியின் புகைப்படத்துடன் கூடிய புடவை மாதிரிகள் வந்துள்ளன. அதில் மோடி அரசின் முக்கிய சாதனைகள் விளக்கும் வகையிலான பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

அதாவது காசி விசுவநாதர் காரிடார், அயோத்தி ராமர் கோயில், பிரதமர் மோடியின் புகைப்படம், பாஜக மற்றும் இந்துத்துவ வசனங்கள், பாஜகவின் தேர்தல் சின்னம் தாமரை போன்றவை புடவைகளில் அச்சிடப்பட்டுள்ளன. இந்தப் புடவைகள் உ.பியில் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புடவைகளின் பெரும்பாலான வடிவமைப்புகள் 3D முறையில் அச்சிடப்பட்டுள்ளன.  " ராமரை அழைத்து வந்தவர்களை அழைத்து வருவோம்"  என்ற முழக்கங்களும் அதில் அச்சிடப்பட்டுள்ளன. மீரட், லக்னோ, கான்பூர் மற்றும் கோரக்பூரில் உள்ள புடவை ஷோரூம்களில் இத்தகைய புடவைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்தப் புடவைகள் வியாபாரிகள் மற்றும் தெரிந்தவர்கள் என அனைவருக்கும் பரிசாக அனுப்பப்படுகிறது என கான்பூரைச் சேர்ந்த புடவை வியாபாரி ராஜு என்பவர் தெரிவித்துள்ளார். மீரட்டைச் சேர்ந்த புடவை வியாபாரி ஒருவர் நாங்கள் சில மாதிரிகளை காட்டியுள்ளோம், ஆர்டர்கள் கிடைத்தவுடன் சேலைகள் அச்சிட்டு விநியோகிக்கப்படும் என கூறியுள்ளார்.

தற்போது 20 முதல் 24 உற்பத்தியாளர்கள் சூரத்தில் 200 முதல் 500 ரூபாய் வரை இந்த ஆர்டர்களை செய்து கொடுப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்தத் தேர்தல் புடவைகள் தயாரிக்க 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை செலவாகும், ஆனால் இவைகளின் சந்தை விலை 1000 முதல் 2,500 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மோடி யோகியின் புகைப்படங்கள் கொண்ட புடவைகளே அதிக ஆர்டர்கள் வந்துள்ளது என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். உத்தரபிரதேச மாநில தேர்தல் கொரோனா மந்த நிலையை மாற்றி விட்டது என வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.  ரினால் , தர்கி, சாந்தோரி, மற்றும் சில்க் கரீப்  மெட்டீரியல்களில் இந்த சேலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை தோற்றத்திலும், தரத்திலும் மிகவும் கவர்ச்சிகரமானவை, இதனுடன் தொப்பிகள், கோட்கள் மற்றும் கொடிகளும் அதிக அளவில் ஆர்டர்கள் வந்துள்ளன. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் இவைகளின் தேவை அதிகரித்துள்ளது.

நேரம் குறைவாக இருப்பதால் முதற்கட்டமாக இந்த சேலைகளை தனது தொண்டர்களுக்கு விநியோகம் செய்வதுதான் பாஜகவின் திட்டமாக உள்ளது. 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றாலும் மோடி மற்றும் யோகியின் மீது மட்டுமே கவனம் செலுத்தப்படுகிறது. அதனாலேயே அவர்களின் சின்னங்களைக் கொண்ட பொருட்களின் தேவை அதிகமாக உள்ளது, இங்கு உற்பத்தி பெரிய அளவில் நடந்து வருகிறது என சூரத்தை சேர்ந்த புடவை உற்பத்தியாளர் மனோகர் சிஹாக் கூறியுள்ளார். உபி பாஜக மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் சூரத்தில் ஜவுளி வியாபாரிகளுக்கு அதிக அளவில் ஆர்டர்களை வழங்கியுள்ளனர். இதுகுறித்து ஜவுளி வியாபாரி லலித் ஷர்மா கூறுகையில்,  உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர், ஜான்பூர் மற்றும் கான்பூர் ஆகிய நகரங்களில் இருந்து அதிக ஆர்டர்கள் வந்துள்ளன. மற்ற நகரங்களில் இருந்தும் தொலைபேசி மூலம் பலரும் விசாரித்து வருகின்றனர். வரும் காலங்களில் தேவை அதிகரிக்கும் என தெரிகிறது எனக் கூறியுள்ளார்.

வந்துள்ள ஆர்டர்கள் அனைத்தும் 10 முதல் 15 நாட்களில் முடிவடையும் என்றும், மற்றொரு ஜவுளி வியாபாரி பியூஸ் பட்டேல் கூறியுள்ளார். சூரத்தில் தயாரிக்கப்படும் புடவைகள் நாட்டின் மிகவும் பிரபலமாக உள்ளன. இங்கே மலிவான விலை முதல் உயர்ந்த விலையுள்ள புடவைகள் வரை தயாரிக்கப்படுகிறது. தற்போதைய சூழலில் யோகி மோடி படங்களுடன் கூடிய சேலைகளுக்கே அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. சரியான நேரத்தில் அனைத்து ஆடைகளையும் நாங்கள் செய்து கொடுக்கிறோம் இது ஜவுளித் தொழிலுக்கு பொற்காலம் என அவர் கூறியுள்ளார். 
 

click me!