
இமாச்சல பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சியை கரையான்களுக்கு ஒப்பிட்டு பேசிய பிரதமர் மோடி , காங்கிரஸ் கட்சியை சுத்தமாக துடைத்து எறியவேண்டும் என தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார்.
இமாச்சல பிரதேசத்தில் வருகிற 9-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தேர்தல் நெருங்குவதை ஒட்டி அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள ராய்ட் நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
கரையான்கள்
அப்போது அவர் பேசியதாவது-
இமாச்சல பிரதேச காங்கிரஸ் கட்சி மாநிலத்தை கரையான்களைப்போல அரித்து வருகிறது. அக்கட்சியை மாநிலத்தை விட்டு துடைத்து எறியுங்கள்,.
அப்போதுதான் இமாச்சல பிரதேசத்தைப் பிடித்துள்ள தொற்றுநோயைக் குணப்படுத்த முடியும்.
ஏற்கனவே தோல்வி
இமாச்சல பி்ரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. இதனால்தான் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வரவில்லை. மேலும் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் இம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை ஏற்கனவே முடித்துக்கொண்டுள்ளனர். முதலமைச்சர் வீரபத்ர சிங் தனித்து விடப்பட்டுள்ளார்.
ஊழல் மலிந்துவிட்டது
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. இந்த பாவத்தின் பலனை அக்கட்சி அறுவடை செய்யும்.
நான் இங்கு பாரதிய ஜனதா கட்சியை வெறுமனே வெற்றிபெறச்செய்ய கேட்க வரவில்லை. பாரதிய ஜனதா கட்சியை நான்கில் மூன்று பங்கு வெற்றி பெறச்செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எல்லா பூத்துக்களிலும் காங்கிரஸ் கட்சியை மூட்டையாகக் கட்டி வெளியே அனுப்புங்கள்.
தூங்க விடமாட்டேன்
பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதியை கறுப்புதினமாக கடைபிடிக்கப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. வழக்கமான கொள்ளையர்களை நான் நிம்மதியாக தூங்க விடமாட்டேன்.
நரேந்திர மோடி சர்தார் வல்லபாய் படேலின் சீடன். படேலின் சீடனை அடக்கிட முடியாது
என்பதை காங்கிரஸ் கட்சியினர் புரிந்துகொள்ளவில்லை.
இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயி ஆட்சியில் ஏராளமான நிதி வழங்கப்பட்டது. பா.ஜ.க. முதலமைச்சர் பிரேம் குமார் துமல் ஆட்சியில் இமாச்சல பிரதேசம் முன்னேற்றம் அடைந்தது. துமல் இமாச்சல பிரதேச வளர்ச்சிக்காக பாடுபட்டார்.
முதலமைச்சராக துமல் தேர்ந்தெடுக்கப்பட்டால் மாநிலம் உன்னத வளர்ச்சி அடையும். சுற்றுலாத்துறையும் கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த சட்டமன்ற தேர்தலில் பிரேம் குமார் துமல், பா.ஜ.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.