
காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட யாருடைய பினாமி சொத்துக்களையும் விட்டுவைக்க மாட்டோம் என்றும் மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட அந்த சொத்துக்களை விரைவில் பறிமுதல் செய்வோம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இமாசல பிரதேச மாநில சட்டசபைக்கு வருகிற 9-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சுந்தர்நகர், காங்ரா ஆகிய இடங்களில் பா.ஜனதா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் மக்களை காங்கிரஸ் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது என்றும் அடுத்து பினாமி சொத்துகள் மீது நடவடிக்கை எடுக்க போவதை முன்கூட்டியே அறிந்துதான் அவர்கள் தனக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர் என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர்கள் ஏழை மக்களிடம் இருந்து கொள்ளையடித்த சொத்துகள் அனைத்தையும் திருப்பித் தரவேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் இந்த பிரச்சனையில் யாரும் தப்பி விட முடியாத அளவிற்கு ஒரு நிலையை ஏற்படுத்தப் போவதாக மோடி தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டுவரப் போகும் சட்டம் பினாமி பெயர்களில் காங்கிரஸ் தலைவர்கள் பதுக்கி வைத்துள்ள நிலம், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் எதையும் விட்டு வைக்காது என்றும் அவர் கூறினார்.
பினாமி சொத்துகளை அந்த தலைவர்கள் திரும்ப பெற முடியாத நிலை ஏற்படுத்தப்படும் என்றும், ஏனென்றால் இது மக்கள் பணம். தங்களது சொந்த நலனுக்காக மக்களிடம் இருந்து அவர்கள் கொள்ளையடித்த பணம் என்று தெரிவித்த மோடி, 2014-ம் ஆண்டு ஊழலை ஒழிப்பதற்காகத்தான் மக்கள் தன்னை தேர்ந்தெடுத்தாகவும் அதை தொடர்ந்து நிறைவேற்றப் போவதாகவும் குறிப்பிட்டார்.