
பா.ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகனின் நிறுவனம் ஒரு ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு லாபம் ஈட்டியது தொடர்பாக பெரும் சர்ச்சை உருவானது.
அது அடங்குவதற்குள், நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மகன் சவுரியா தோவல் நடத்தும் தனியார் அமைப்பின் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 4 அமைச்சர்கள், பா.ஜனதாவின் பொதுச்செயலாளர் ராம் மாதவ் உள்ளிட்ட பலர் இயக்குநர்களாக இருப்பது வெளியாகியுள்ளது.
நாட்டையே உலுக்கும் இந்த இரு மிகப்பெரிய விஷயங்களையும் ‘தி வயர்’ இணையதளம்தான் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இப்போது சர்ச்சை என்னவென்றால், நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன், ஒரு நிறுவனத்தில் எப்படி இயக்குநராக பதவி வகிக்கிறார்? என்பதும், மத்திய அமைச்சர்கள் பலர் அந்த நிறுவனத்தில் இயக்குநர்களாக எந்த அடிப்படையில் வகிக்கிறார்கள் அது முரணாக இல்லையா? என்பதாகும்.
நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மகன் நடத்தும் நிறுவனத்துக்கு எங்கிருந்து நிதி வருகிறது?, அதன் வரவு செலவு அறிக்கை என்ன?, எப்படி செயல்படுகிறது? என்பது குறித்த எந்த தகவலும் வெளிப்படையாக இல்லை.
இந்தியா பவுண்டேஷன்
மிக உயரிய பொறுப்பான, நாட்டின் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜித் தோவலின் மகன் சவுரியா தோவல் நடத்தும் நிறுவனம்தான் ‘இந்தியா பவுண்டேஷன்’. இது நிறுவனமாக பதிவு செய்யாமல், அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பணி என்ன?
‘இந்தியா பவுண்டேஷன்’ என்பது, கடந்த 2009ம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பணி என்பது, மத்திய அரசு சார்பில் நடத்தும் முக்கிய நிகழ்ச்சிகள், பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தின் போது நடத்தப்படும் நிகழ்ச்சிகள், பாதுகாப்பு துறை சார்பில் நிகழ்ச்சிகளை நடத்துதல் , ஆட்சியாளர்கள், சர்வதேச தொழில் அதிபர்களைச் சந்தித்து கொள்கை முடிவுகளை எடுக்க உதவுதல், முதலீடுகளை கோர உதவுதள் போன்ற பணிகளைச் செய்கிறது. ஆங்கிலத்தில் இது ‘திங்க் டேங்க் ’ என்று சொல்லபடுகிறது.
அமைச்சர்களுக்கு என்ன பங்கு?
இந்த நிகழ்ச்சிகளுக்கு தேவையான நிதிகளை உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள், மத்திய அரசு ஆகியவற்றிடம் இருந்து பெற்று வருகிறது. இதற்கான ‘ஸ்பான்சர்களை பெற்றுக் கொடுப்பதும் மத்திய அமைச்சர்களாக இருக்கும் இயக்குநர்கள்தான்.
மத்திய அமைச்சர்களாக இருப்பவர்கள் நாட்டின் நலன் கருதி மற்ற தனியார் அமைப்புகளில் பொறுப்புகளில் இருக்கக்கூடாது என்பது விதிமுறையாகும், அதையும் மீறி இதில் அமைச்சர்கள் உள்ளனர்.
எத்தனை அமைச்சர்கள்?
ஆனால், இந்தியா பவுண்டேஷன் அமைப்பில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, வெளியுறவுறுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ஆகியோர் இதில் இயக்குநர்களாக இருக்கிறார்கள். மேலும், பாரதிஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ராம் மாதவ் வாரணாசியும் இயக்குநர்களில் ஒருவராவார்.
வெளிப்படை இல்லை
இந்நிலையில், ‘இந்தியா பவுண்டேஷன்’ அமைப்பு இதுவரை தனது வரவு செலவு அல்லது நிதி அறிக்கையை ஒருபோதும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை, இதில் இயக்குநர்களாக இருக்கும் அமைச்சர்களும், அமைப்புக்கு வருவாய் எப்படி வருகிறது? என்பதை கூறவும் மறுக்கிறார்கள்.
பதில்
இது குறித்து இந்தியா பவுண்டேஷன் அமைப்பின் இயக்குநர் சவுரியா தோவலிடம் கேட்டபோது, “ விளம்பரங்கள், பத்திரிகைகள் விற்பனை, கூட்டங்கள் நடத்துவது ஆகியவை மூலம் வருவாய் கிடைக்கிறது’’ என்று தெரிவிக்கிறார். ஆனால், இந்த அமைப்புக்கு வருவாய் மூலாதாரம் என்ன?, நிறுவனம் அமைந்திருக்கும் இடத்துக்கு வாடகை யார் தருவது?, ஊழியர்களுக்கான ஊதியம் யார் அளிப்பது? என எந்த கேள்விக்கும் தோவல் பதில் அளிக்கவில்லை.
மறுப்பு
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பில் வெளிநாட்டு நிறுவனங்களுடான ஒப்பந்தம் தொடர்பான நிகழ்ச்சிகள் பலவற்றை ‘இந்தியா பவுண்டேஷன்’ தான் நடத்துகிறது. ஆனால், வெளிநாட்டு நிறுவனங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், பாதுகாப்பு தளவாட தயாரிப்பு நிறுவனங்கள், விமான தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து பெற்ற ‘ஸ்பான்சர்கள்’ குறித்து ஏதும் தெரிவிக்க ‘இந்தியா பவுண்டேஷன்’ மறுத்துவிட்டது.
கேள்விக்கு பதில் இல்லை
இந்த அமைப்பில் இயக்குநர்களாக இருக்கும் அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 4 அமைச்சர்களுக்கு வயர் இணையதளம் சார்பில் கேள்விகள் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது.
அதில், “ அமைச்சர் பொறுப்பு வகிக்கும் நீங்கள் ஒரு நிறுவனத்தின் இயக்குநராக இருந்து கொண்டு, வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து நிதி உதவியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெறுவது, முரண்பாடாக இல்லை என நினைக்கிறார்களா?’’ எனவும், அதிலும் “ பாதுகாப்பு, வர்த்தகம், விமானம், வெளியுறவு பதவில் இருந்து கொண்டு நிறுவனத்தின் பொறுப்பில் இருக்கலாமா’’ எனவும் கேட்கப்பட்டது.
ஆனால், இந்த கேள்விகள் அனைத்தும் மத்தியஅமைச்சர்கள் பதில் ஏதும் அளிக்கவில்லை. மாறாக, இது இந்தியா பவுண்டேஷன் அமைப்பின் இயக்குநர் சவுரியா தோவலிடம் கேட்பதுதான் தகுதியானது என்று விளக்கம் தரப்பட்டது.
வரவு செலவு தாக்கல் செய்ததா?
மேலும், இந்தியா பவுண்டேஷன் அமைப்பு, அன்னிய நிதி ஒழுங்கு முறைச் சட்டத்தின் கீழ் சான்றிதழும் பெற்றுள்ளது. இந்த சான்றிதழை 2017ம் ஆண்டு, ஜூன் 6-ந்தேதி முதல் 2022ம் ஆண்டுவரை சமீபத்தில் புதுப்பித்துள்ளது.
இந்த அன்னிய நிதி ஒழுங்குமுறை சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் ஆண்டுதோறும் தங்களின் வரவு செலவு கணக்கை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்பது சட்டமாகும். அப்படி இருக்கையில், கடந்த 4 ஆண்டுகளாக இந்த நிறுவனம் எந்தவிதமான வரவு செலவு அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை என்பது தெரிகிறது.
நிர்மலா வீட்டில் அலுவலகம்
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன், புதுடெல்லி ஹேலே சாலையில் உள்ள டோனி அடுக்குமாடிக் குடியிருப்பில் நிர்மலா சீதாராமன் வசித்துவந்தார். 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் நிர்மலா சீதாராமன் மத்திய அமைச்சரானதால், அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. தற்போது, இந்த அடுக்குமாடி குடியிருப்பில்தான் இந்தியா பவுண்டேஷன் அலுவலகம் செயல்பட்டுவருகிறது.
பிரதமர் அலுவலகம் மவுனம்....
தனியார் அமைப்பில் மத்திய அமைச்சர்கள் 4 பேர் இயக்குநர்களாக இருப்பது குறித்து தங்களுக்கும் , பிரதமர் மோடிக்கும் தெரியுமா, தெரிந்தால் அது குறித்து என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?, நாட்டின் பாதுகாப்பு ஆலோசராக இருக்கும் அஜித் தோவலின் மகன் நிறுவனத்தில் அமைச்சர்கள் பதவி வகிப்பது எப்படி? என்று பிரதமரின் முதன்மை ஆலோசகர் நிர்பேந்திர மிஸ்ராவிடம் ‘தி வயர்’ சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது ஆனால், பிரதமர் அலுவலகத்திடம் இருந்தும் எந்தவிதமான பதிலும் இல்லை.
மேலும் பலர்..
இந்த 4 மத்திய அமைச்சர்கள் தவிர, மேலும் பலர் உள்ளனர். அவர்களில் மாநிலங்கள் அவையின் நியமன எம்.பி ஸ்வபன் தாஸ்குப்தா, . ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி, நேரு நினைவு அருங்காட்சியகம்த்தின் இயக்குநர் சக்தி சின்ஹா, பிரசார் பாரதி வாரியத்தின் தலைவர் ஏ. சூர்ய பிரகாஷ், இந்திய ராணுவத்தின் முன்னாள் ஆலோசகர் துருவ் சி. கடோச், முன்னாள் கப்பல்படை அதிகாரி அலோக் பன்சால், அசோக் மிட்டல், ஐ.சி.டபில்.ஏ. முன்னாள் தலைவர் சந்திரா வாட்வா, பவாரி குழுமத்தின் தலைவர் பினோத் பவாரி ஆகியோரும் இயக்குநர்களாக இருக்கிறார்கள்.
மீண்டும் சர்ச்சை
மத்திய அமைச்சர்களாக இருப்பவர்களும், மத்திய அரசின் முக்கிய பொறுப்புகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களும் ஒரு தனியார் அமைப்பில் இயக்குநர்களாக இருப்பது தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. குறிப்பாக இந்தியா பவுண்டேஷன் அமைப்புக்கு கிடைக்கும் நிதி உதவி, ஸ்பான்சர்கள், வரவு செலவு அறிக்கை குறித்த எந்த தகவலும் வெளிப்படையாக இல்லை என்பதும் சர்ச்சையாகி இருக்கிறது.