
இந்துக்களுக்கு எதிராகப் பேசும் நடிகர் கமல் ஹாசன் , அவரைப் போன்ற மனிதர்களை தூக்கிலிட வேண்டும் அல்லது சுட்டுக் கொள்ள வேண்டும் என்று இந்து மகா சபா தலைவர் பண்டிட் அசோக் சர்மா கொலை வெறியுடன் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்து தீவிரவாதம்
நடிகர் கமல் ஹாசன் ‘ஆனந்த விகடன்’ வாரபத்திரிகையில் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ என்ற தொடரை எழுதி வருகிறார். அதில் இந்த வாரத்தில் குறிப்பிட்டுள்ளதில், “ இந்து தீவிரவாதம் இல்லை என கூறமுடியாது. இந்துவலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது என்று அவர் எழுதியிருந்தார்.
வழக்கு
இதற்கு பா.ஜனதா கட்சித் தலைவர்கள் பலர் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி நகரில் கமல் ஹாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை மிரட்டல்
இந்நிலையில், இந்துக்களுக்கு எதிராகப் பேசும் நடிகர் கமல் ஹாசனை சுட்டுக்கொன்று பாடம் கற்பிக்க வேண்டும் என அகில பாரதிய இந்து மகா சபாவின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா கொலைவெறியுடன் பேசி மிரட்டல் விடுத்தார்.
கண்டனம்
நடிகர் கமல் ஹாசனுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலை, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடுமையாகக் கண்டித்து, மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். டுவிட்டரில் முதல்வர் பினராயி விஜயன் வெயிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது-
கைது செய்ய வேண்டும்
நடிகர் கமல் ஹாசனின் பேச்சு உரிமைக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த இந்து மகா சபையின் தலைவரின் கிரிமினல் செயலை கடுமையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற மதவெறியர்கள், தீவிரவாத எண்ணம் கொண்டவர்கள் கொலைமிரட்டல் விடுத்தால், சம்பந்தப்பட்ட மாநில அரசு அதிகாரிகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும்.
ஏன் கொல்லப்பட்டார்கள்
சுதந்திரத்துக்கு போராடிய தேசப்பிதா மகாத்மா காந்தி, முற்போக்கு எழுத்தாளர்கள் பன்சாரே, கல்புர்கி, தபோல்கர், மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ஆகியோருக்கு என்ன நடந்தது என்பது இந்த நாட்டுக்கே தெரியும். ஏன் அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதும் நாட்டுக்கே தெரியும்.
கண்டிக்கிறேன்
எந்த மதம், எந்த சாதி, எந்த பாலினத்தை ேசர்ந்தவர்களாக இருந்தாலும், தீவிரவாதத்தின் மூலம் தங்களின் மதரீதியான திட்டங்களுக்காக நாட்டை சீர்குலைப்பதை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.