அமெரிக்கா போன்ற பண்ணை முதலாளிகளை உருவாக்க மோடி துடிக்கிறார். அறிவாலயத்தில் அணிவகுத்த தலைவர்கள்..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 21, 2020, 2:19 PM IST
Highlights

விவசாய நிலத்தை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வழங்குவதற்காக மத்திய அரசு இந்த சட்டத்தை  நிறைவேற்றியுள்ளது. சர்வாதிகாரிகரர்களுக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை இருக்காது. கிராமங்களை அழித்து பெரிய நகரங்களாக மாற்றுவதான் ஆர்எஸ்எஸின் கொள்கை.

மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட விவசாயிகள் தொடர்பான, அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 மற்றும் விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020 ஆகிய 3 மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில்,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விவசாயிகளுக்கு விரோதமாக"பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள 3 சட்டங்கள்" குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம்  நடைபெற்றது. 

இதில்,தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி,மதிமுக பொது செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பாக முன்னாள் எம்பி அப்துல் ரகுமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திராவிட கழக பொருளாளர் குமரேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷனண், கொங்கு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி  தலைவர் ரவி பச்சமுத்து, மற்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டம், 10.30 மணி அளவில் ஆரம்பித்து சுமார் 11.50 மணி வரை நடைபெற்றது. 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது: 

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி  சார்பில் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது. ஜனநாயகத்தை குழிதோண்டி புதைந்து, மூன்று கேடு மசோதாவை மக்களவையில் மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகின்ற 28 தேதி தலைநகர், மாவட்ட தலைநகர் ஒன்றியங்களில் கண்டன மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மேலும், விவசாயிகள் வருகிற 25 ம்தேதி நடத்தும் ஆர்பாட்டத்திற்கு, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி முழு ஆதரவும், வரவேற்பு அளிக்கிறது. மேலும், எந்தெந்த  இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் பங்கேற்போர்கள் என்று பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது :- 

ஜனநாயகத்திற்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கார்ப்பரேட் கம்பெனிகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் வகையில் மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று சட்டங்கள் அமைந்துள்ளது. சர்வாதிகார முறையில் மத்திய அரசு சட்டத்தை நிறைவேற்றி உள்ளது.
இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் இதற்கு துணை போன அதிமுக அரசை கண்டித்து திமுக தலைமையில் வருகிற 28-ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: 

மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று சட்டங்கள் விவசாயத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும். இந்திய ஜனநாயக சக்திகள் விழித்துக்கொள்ள வேண்டும். ஆர்எஸ்எஸின் கொள்கை சிறு விவசாயிகளை கூடாது என்பதுதான் அதன் முதல் கட்டமாக விவசாயிகள் வருமானத்தைக் குறைத்து, விவசாயிகளின் மின்சாரத்தை வழங்குவதை தடுத்து விவசாய நிலத்தை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வழங்குவதற்காக மத்திய அரசு இந்த சட்டத்தை  நிறைவேற்றியுள்ளது. 

சர்வாதிகாரிகரர்களுக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை இருக்காது. கிராமங்களை அழித்து பெரிய நகரங்களாக மாற்றுவதான் ஆர்எஸ்எஸின் கொள்கை. அமெரிக்கா போன்ற பண்ணை முதலாளிகளை உருவாக்க மோடி துடிக்கிறார். நாடாளுமன்றத்தில் எம்.பிகள் சஸ்பென்ட் செய்தது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார். வருகிற 28-ஆம் தேதி மாநிலங்கள் மாவட்டங்கள் ஒன்றியங்கள் உள்ளிட்ட அனைத்து இடத்திலும் போராட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது. 
 

click me!