அடுத்தடுத்து தமிழகத்திற்கு படையெடுக்கும் மோடி. 25 ஆம் தேதி கோவையில் எழுச்சி உரை. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

By Ezhilarasan BabuFirst Published Feb 18, 2021, 11:28 AM IST
Highlights

அதற்காக  24ஆம் தேதி தனி விமானம் மூலம் புதுச்சேரி வரும் அவர், அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதனை முடித்துக் கொண்டு பிற்பகல் 3 மணியளவில் தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வருகை தருகிறார், 

வரும் 25ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். கோவையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள உள்ளதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் பாஜக தமிழகத்தில் தனக்கென தனித்துவத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த முறை அதிமுக  கூட்டணியில் 60 இடங்களை கேட்டுள்ள பாஜக அதில் 40 இடங்களையாவது கட்டாயம் கொடுத்தாக வேண்டும் என அதிமுகவை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் அதிமுக, பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ள 20 இடங்களை ஒதுக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதேபோல் இந்த முறை, பாஜக இரண்டு இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு நுழைய வேண்டும் என தீவிரகாட்டி வருகிறது. அதற்காக  பாஜக தேசிய தலைமை தமிழக பாஜக  நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளையும், அறிகுறிகளையும், வியூகங்களையும் வழங்கி வருகிறது. எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து பாஜக மூத்த முன்னோடி தலைவர்கள் தமிழகத்திற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். சமீபத்தில் அமித்ஷா ஜே.பி நட்டா ஆகியோர் அடுத்தடுத்து தமிழகத்துக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், கடந்த 14ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பல்வேறு நல திட்டங்களை துவக்கி வைக்கும் விழாவில் பிரதமர் கலந்து கொண்டார். அப்போதே தேவேந்திரகுல வேளாளர் சமூகத்திற்கான பட்டியல் வெளியேற்றத்தை அவர் அறிவிப்புச் செய்தார். அடுத்தடுத்து தமிழகத்திற்கு மூன்று பயணங்களை மேற்கொள்ள உள்ள மோட, வரும் 25ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார். 

அதற்காக  24ஆம் தேதி தனி விமானம் மூலம் புதுச்சேரி வரும் அவர், அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதனை முடித்துக் கொண்டு பிற்பகல் 3 மணியளவில் தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வருகை தருகிறார், அங்கு அவருக்கு பாஜக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதனை ஏற்றுக் கொள்ளும் பிரதமர் கார் மூலம் கொடிசியா அரங்கிற்கு செல்கிறார், அங்கு நடக்கும் விழாவில் கலந்துகொண்டு கீழ்பவானி திட்டத்திற்கு உட்பட்ட கால்வாய்களை மேம்படுத்துதல் புனரமைத்தல், நவீனப்படுத்துதல் உட்பட 960 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். அதனை முடித்துக்கொண்டு கார் மூலம் பாஜகவின் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் கொடிசியா மைதானத்திற்கு செல்லும் அவர் பொதுக்கூட்டத்தில் எழுச்சி உரையாற்றுகிறார். அதனை முடித்துக் கொண்டு இரவில் தனி விமானம் மூலம் பிரதமர் டெல்லி திரும்ப உள்ளார். 

மோடியின் வருகையை முன்னிட்டு கோவை மாநகர பகுதிகளில் உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர ஒட்டுமொத்த கோவை மாநகரில் உள்ள ஓட்டல்கள் தங்கும் விடுதிகள் சந்தேகத்துக்குரிய வகையில் யாராவது இருந்தால் அவர்கள் குறித்து தகவல் கொடுக்கும்படி நிர்வாகங்களுக்கு காவல்துறை அறிவுரை வழங்கி உள்ளது. ரயில் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் பிரிவு போலீசார் மூலம் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 
 

click me!