பெரிய அளவிலான ஒரு விஷயத்தை திரித்து கூறுவது என்பதை வேதனைக்குரிய விஷயமாக தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தேர்தல் பரப்புரைக்காக புதுச்சேரி வந்துள்ள ராகுல் காந்தி நேற்று முத்தியால்பேட்டையில் மீனவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ராகுல் காந்தியிடம் அங்கிருந்த மீனவ பெண் ஒருவர், ‘எங்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறவே இல்லை. அப்படியே உள்ளது. புயல் சீற்றத்தால் பல சிரமங்களை எதிர்கொண்டோம். அப்போது உங்கள் முன்னால் நிற்கும் முதலமைச்சர் நாராயணசாமி கூட எங்களை பார்க்கவில்லை எனக்கூறினார். இதுகுறித்து ராகுல் காந்தி அருகே இருந்த முதலமைச்சர் நாராயணசாமியிடம் அந்த பெண் என்ன கூறுகிறார் என விளக்கமளிக்க கேட்டார். அதற்கு அவரோ, ‘அவர் நிவர் புயல் குறித்த தருணங்களை பற்றி பேசுகிறார். நான் அப்போது அவர்களை வந்து சந்தித்தேன். அது குறித்து தான் கூறுகிறார்’ என்று மாற்றி கூறினார். மொழி பெயர்க்க சொன்ன காரணத்திற்காக தன் மீதான குற்றச்சாட்டையே மாற்றிக் கூறிய நாராயணசாமியின் நடவடிக்கை விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
undefined
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ‘மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை. அந்த கலையை தெரிந்தவர்கள் முதலில் மொழிபெயர்த்திருக்க வேண்டும். பெரிய அளவிலான ஒரு விஷயத்தை திரித்து கூறுவது என்பதை வேதனைக்குரிய விஷயமாக தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த மாநில விவகாரம் என்பது நன்றாக புரிகிறது. நம் மாநிலத்தின் நிலை என்பது மக்களுக்கும் நன்றாக இப்போது தெரிந்திருக்கும். அதனால் மீண்டும் புதுச்சேரியில் அதிமுக ஆட்சி அமைக்கும். புரட்சி தலைவர் முதன் முதலில் கட்சி ஆரம்பித்து ஆட்சியை கைப்பற்றியது புதுச்சேரியில் தான், அதனால் அதே நிலை மீண்டும் திரும்பும்’ என உறுதியாக தெரிவித்தார்.
அதேபோல், என் அப்பாவை கொலை செய்தவர்களை மன்னித்துவிட்டேன் என ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்திற்கு பதிலளித்த அமைச்சர், அது ராகுல் காந்தியின் சொந்த கருத்து. ஆனால் சட்டப்படி தான் எதுவும் நடக்கும். 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற முடிவில் அதிமுக எப்போதும் உறுதியாக இருக்கிறது எனக்கூறினார். மேலும் அதிமுகவில் சசிகலாவுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.