
எல்லாவற்றையும் தெளிவாக திட்டமிட்டு, வரும் தேர்தலில் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதியின் பட்டியல் வரை தயார் செய்து எடுத்துக்கொண்டு டெல்லிக்கு சென்ற எடப்பாடிக்கு, கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே எடப்பாடி டெல்லி செல்கிறார் என்று கூறப்பட்டாலும், பிரதமரை சந்தித்து, அவர் மனம் குளிரும்படி, பாஜகவுக்கு ஒதுக்கப்படவுள்ள பட்டியலையும் கொடுத்து, முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொள்ளும் ஏற்பாட்டுடன்தான் அவர் சென்றார்.
ஆனால், தமிழகத்தில் நிலவும் அசாதாரணமான சூழல், டெல்லியில் தினகரனிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணை ஆகிவற்றை கவனத்தில் கொண்டு, எடப்பாடியுடனான சந்திப்புக்கு பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அத்துடன், எடப்பாடி டெல்லி செல்வதற்குள், பாஜகவின் முக்கிய பிரமுகர் ஒருவர், எடப்பாடி தொடர்பான முக்கிய கோப்பு ஒன்றை பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதில், சசிகலாவின் தீவிர ஆதரவாளர் பழனிசாமி என்றும், கூவத்தூரில் எம்.எல்.ஏ க்களை தங்கவைத்து கவனிக்கும் முக்கிய பணி இவருக்கே வழங்கப்பட்டது என்றும் கூறப்பட்டிருந்தது.
சசிகலாவால் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. தமிழக மக்கள் மத்தியில் இவருக்கு கொஞ்சம் கூட நல்ல பெயர் இல்லை என்றும் அந்த கோப்பில் உள்ள விவரங்கள் மோடிக்கு சுட்டி காட்டின.
அதனால் உஷாரான மோடி, எடப்பாடியை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்காமலேயே திருப்பி அனுப்பி இருக்கிறார்.
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை சந்தித்து பேசியது, மத்திய அரசுக்கு தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு கோரிக்கை பட்டியலை அளித்ததை தவிர, எடப்பாடியின் டெல்லி பயணம் வேறு எந்த பலனையும் தரவில்லை.
பிரதமரைதான், சந்தித்து பேச முடியவில்லை, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவையாவது சந்தித்து பேசலாம் என்று முயற்சித்தார் எடப்பாடி, ஆனால் அவரும் சந்திக்க நேரம் ஒதுக்காமல் புறக்கணித்து விட்டார்.
முதல்வர் பதவியை நிலைப்படுத்தும் கனவோடு, பிரதமரை சந்திக்க டெல்லி சென்ற எடப்பாடி, வெங்கையா நாயுடுவை கூட சந்தித்து பேசமுடியாமல் வெறுத்து போய் சென்னை திரும்பி உள்ளார்.
கொங்கு லாபியை சேர்ந்த ஆளுநர் ஒருவர், பிரதமரை சந்தித்து பேச எடப்பாடிக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தாலும், அவருக்கு முன்னால் வந்து சேர்ந்த ஒரு கோப்பு, அந்த சந்திப்புக்கு வைத்து விட்டது ஆப்பு.
இதனால், வெறுத்து போயுள்ளார் எடப்பாடி என்று ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.