
விவசாயிகளுக்காக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாளை நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வறட்சி நிவாரணம், பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் தமிழக விவசாயிகள் 41 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்கும் பொருட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 16 ஆம் தேதி திமுக அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டியது. இதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் மூஸ்லீம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டன.
அப்போது விவசாயிகள் பிரச்சனையை தீர்க்கும் பொருட்டு நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. இப்போராட்டத்திற்கு வணிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், மணல் லாரி உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
இந்தச் சூழலில் முழு அடைப்பு போராட்டத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி அதன் மூலம் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்து விட திமுக பகல் கனவு காண்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
விவசாயிகளின் துயர் துடைப்பதாகக் கூறி மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கக் கூடாது என்று தெரிவித்த தமிழிசை, ஏரி குளங்களை தூர் வார மறந்தவர்களே விவசாயிகளின் துயரங்களுக்கு காரணமானவர்கள் என்றார்.