
நகர்ப்புற தேர்தலையொட்டில் மதுரையில் பரப்புரையில் ஈடுப்பட்ட மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன்,மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் என்னிடம் ராஜினாமா பத்திரம் எழுதிக்கொடுத்துள்ளனர் என்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் ராஜினாமா செய்வார்கள் என்றும் பேசினார்.
மேலும் பேசிய அவர், எங்கள் வேட்பாளர்கள் கையில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வசதி இல்லை.அப்படி கொடுத்தாலும் நான் தடுப்பேன். உங்களுக்கு வந்து சேரும் பணம் 100 மடங்கு கொள்ளை போகிறது. வேண்டியதை கேட்டு பெறமுடியாமல் ஆகிவிடும். அவர்களுக்கு ஓட்டு பெற்று தரும் கிராம சபை கூட்டத்தை ஞாபகப்படுத்தியதே நாங்கள் தான். இது மெத்த படித்தவர்களுக்கு தெரியும். ஆனால் மக்களுக்கு அதிகாரம் கொடுக்க மறுக்கிறார்கள்.
நாங்கள் வார்டுகளில் சபைகள் அமைத்து, 'என்ன செலவு செய்தீர்' என வெற்றிபெற்றவர்களிடம் கேள்வி கேட்கும் அதிகாரத்தை மக்களுக்கு கொடுப்போம். கட்சிக்காக அல்ல. மக்களுக்காக எங்கள் வேட்பாளர்கள் தேர்தலில் நிற்கின்றனர். குடும்பத் தலைவிகளுக்கு மாத ஊதியம் என கூறியதே நான் தான். என் யோசனையை தேர்தல் நேரம் மட்டும் பயன்படுத்தி, பின்மறந்து விட்டு அடுத்த தேர்தல் சென்று விட்டனர்.நான் வாழ்ந்த அடையாளம் மக்களிடம் காட்ட அரசியலுக்கு வந்தேன். இப்போது நாளைய தலைமுறைக்காக கெஞ்சுகிறேன்.
துாங்கா நகரத்தில் துாங்கும் மக்கள் மனசாட்சியை தட்டி எழுப்ப வேண்டும். கொரோனாவை விட தைரியம் மக்களிடம் வேகமாக பரவ வேண்டும் என்றார். மேலும் இன்னும் 25 ஆண்டுகள் கடந்தால் சுதந்திரமடைந்து நூறு ஆண்டுகள் ஆகிவிடும். ஆனால் இன்னும் குடிநீர் முழுமையாக கிடைக்கவில்லை. இங்கு இலவசமாக ஓடுவது கழிவுநீர் மட்டுமே.எல்லா இடங்களிலும் ஓடுகிறது.
இந்தியாவில் ஒவ்வொரு கிராமமும் மாற வேண்டும். மக்கள் மாற்றங்களின் பேச்சாளர்களாக இல்லாமல் போராளிகளாக மாற வேண்டும். இதற்காக மக்கள் நடுநிலையாளர்களாக மாற வேண்டும். ம.நீ.ம., விற்கு மக்களின் ஆதரவு முன்பை விட தற்போது அதிகரித்துள்ளது. மாற்றத்திற்காக நாங்கள் முன் வருவது போல் மக்களும் ஒரு அடி முன் எடுத்து வைக்க வேண்டும் என்று பேசினார். இந்த பிரசாரத்தில் திருப்பரங்குன்றம், அவனியாபுரம், மேலவாசல் உள்ளிட்ட வார்டு வேட்பாளர்கள் பங்கேற்றனர்.