
எடப்பாடியார் ஆட்சியில் ஒரு நாள்! தமிழக சட்டசபை போர்க்களமானது. தி.மு.க.வின் அதிருப்தி ஆவேசத்தால் அ.தி.மு.க.வே மிரண்டு போனது. சட்டசபையை ஒரு வழி பண்ணிட வேண்டிதான் என களமிறங்கிய எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் எக்கச்சக்க ஆர்ப்பரிப்பை அரங்கேற்றினார்கள். அதில் உச்சமாக, சபாநாயகரின் நாற்காலியிலேயே ஒருவர் சென்று அமர்ந்தார். அவர்தான் தி.மு.க.வின் எம்.எல்.ஏ.வாக இருந்த கு.க.செல்வம். அந்த சம்பவத்தின் மூலம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு மனிதரானார். ‘ரவுசு செல்வம்’ என்று அறிவாலயத்திலேயே அவரை செல்லமாக அழைக்கலாயினர்.
அச்சம்பவம் மூலம் தனக்கு கட்சியில் மிகப்பெரிய பதவி உயர்வு ஏதாவது கிட்டுமென நினைத்தார். ஆனால் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் திடுதிப்பென பா.ஜ.க.வில் ஐக்கியமானார். தி.மு.க.வுக்கு மட்டுமல்ல, தமிழக அரசியலில் அம்புட்டு பேருக்குமே அதிர்ச்சி.
அதற்கடுத்து நடந்த சட்டமன்ற தேர்தலில் தனி மெஜாரிட்டியில் வென்று, ஏகபோக செல்வாக்குடன் தி.மு.க. ஆட்சியமைத்து, அடித்து தூக்கிக் கொண்டிருக்கிறது மக்கள் செல்வாக்கில். இந்நிலையில், இதோ சட்டசபை தேர்தலுக்கு இணையாக தமிழகத்தி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களைகட்டியிருக்கும் நிலையில், போன மச்சான் திரும்பி வந்த ஸ்டோரியாக மீண்டும் தி.மு.க.வுக்கே திரும்பியிருக்கிறார் கு.க.செல்வம். அவரை இன்முகத்துடன் வரவேற்றுள்ளார் முதல்வர்.
இன்னாபா இவுரு போறாரு, வர்றாரு! என்று தி.மு.க.வின் மிக முக்கிய புள்ளிகள் தரப்பில் விசாரித்தால் அவர்கள் சொல்லும் திரைமறைவு காரணம் இதுதான்….
“அதாவது செல்வத்துக்கு சென்னையில கோயம்பேடு பக்கமா ஒரு முக்கிய ஏரியாவுல கோடிகளில் மதிப்பில் ஒரு சொத்து இருக்குது. அவரு தி.மு.க.வுல எம்.எல்.ஏ.வா இருந்தப்ப கடன் பிரச்னை ரொம்ப இருந்துச்சு. அதனால அந்த சொத்தை விக்க ட்ரை பண்ணினார். ஆனால் எதிர்க்கட்சிங்கிறதாலே சட்டுன்னு காரியம் முடியலை. ஆனால் கடன் கழுத்தை நெரிச்சுது.
அவரோட பிரச்னையை தெரிஞ்சுகிட்டு பி.ஜே.பி. முக்கிய புள்ளி ஒருத்தரு ‘நம்ம கட்சிக்குள் வாங்க. ஈஸியா சொத்தை வித்து தர்றோம். நீங்க நினைச்ச தொகைக்கும் மேலே!’ அப்படின்னு பிராமிஸ் பண்ணினார். அதை நம்பி நம்ம கு.க.செ.வும் போனார். சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தி.மு.க.வில் இருந்து சிட்டிங் எம்.எல்.ஏ.வையே இழுத்துட்டாரேன்னு அந்த பி.ஜே.பி. புள்ளிக்கு டெல்லியில் மவுசு கூடுச்சு. ஆனால் கு.க.செல்வத்தின் பிரச்னை தீரவே இல்லை.
இந்த நேரத்துல தமிழ்நாட்டில் ஆட்சி மாறி, தலைவர் ஸ்டாலின் தலைமையில நாங்க வந்து ஒக்காந்துட்டோம். ஆனால் செல்வத்துக்கோ கடன் பிரச்னை எகிறிகினே போச்சு. அதனால சென்னையை சேர்ந்த எங்க அமீச்சர் ஒருவரை சந்திச்சு, அவர் கையில இந்த பிரச்னையை சொல்லி, ‘கடன் பிரச்னையாலதான்பா நான் அங்கிட்டு போனேன். மத்தபடி தளபதி எனக்கு உசுருபா’ன்னு உருகினார். அந்த அமைச்சரும் அதை நேரம் பார்த்து தலைவர் கையில சொல்ல, அவரோ பி.ஜே.பி. தங்களை குத்திய அதே குச்சியை வெச்சு மறுபடியும் குத்துறதுக்காக டபுள் ஓ.கே. சொல்லிட்டார். செல்வத்தையும் அறிவாலயத்துல கொண்டாந்து இணைச்சுட்டாங்கோ.
அதுவும் உள்ளாட்சி தேர்தல் உய்யலாலா பாடினு இருக்கிற நேரத்துல நடந்த இந்த சம்பவத்தாலே தமிழக பி.ஜே.பி.க்கு டெல்லியில இருந்து செம்ம ஏத்தாம். ஆனால் எங்க தலைவர் செம்ம ஹேப்பி. சரி செல்வத்தை இட்டாந்து இணைச்ச அமைச்சர் யாரு தெரியுமா?” என்று நம்மை அவர்கள் கேட்க,
“தெரியும் தெரியும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுதானே! அது சரி, செல்வத்தோட பிரச்னையை நீங்களாச்சும் முடிச்சு வைப்பீங்களா?” என்று நாம் கேட்க, மர்மமாக ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு எஸ்ஸாகிவிட்டார்.
இன்னா அரசியல் மாமே இது.!