
கொங்குவை திமுகவின் கோட்டையாக மாற்றும் முனைப்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி இரவு பகல் பாராமல் உழைத்து வருவதாகவும், இரவு 2 மணிக்கு கூட கட்சி நிர்வாகிகளுக்கு போன் செய்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு வருவதாக கட்சி நிர்வாகிகளே தங்களிடம் கூறியதாகவும் மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா கூறியுள்ளார்.
இதுவரையில் தாங்கள் கணித்ததில் கோவையில் ஒரே ஒரு வார்டில் மட்டும் பிஜேபி முன்னிலையில் இருப்பதாகவும், அதுவும் இறுதி நேரத்தில் மாற வாய்ப்பிருக்கிறது என்றும் இதயா தெரிவித்துள்ளார். இதுவரை கோவையை அதிமுகவின் கோட்டையாக எஸ்.பி வேலுமணி மாற்றி வைத்துள்ள நிலையில் அதை செந்தில் பாலாஜி உடைக்கும் சூழல் உருவாகி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் காலம்தொட்டே அதிமுகவின் கோட்டையாக கொங்கு மண்டலம் திகழ்கிறது. பின்னர் செல்வி ஜெயலலிதாவின் காலத்தில் கோவை அதிமுகவின் எங்கு கோட்டையாகவே மாறியது. அவரது மறைவிற்குப் பிறகு அதிமுகவிற்கு வலுவான தலைமை இல்லாததால் இனி பெரிய அளவில் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அதிமுக-பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரிய அளவில் கொங்கு மண்டலத்தில் இக்கூட்டணி வெற்றியை அறுவடை செய்துள்ளது. திமுக ஆட்சியை கைப்பற்றினாலும் கொங்குவில் ஒரு இடத்தை கூட கைப்பற்ற முடியவில்லை.
இதுவரை கொங்கு எப்போதுமே திமுகவுக்கு கைகூடாத கோட்டையாகவே இருந்து வருகிறது.குறிப்பாக தங்கமணி, வேலுமணியின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போன்றோர் கொங்கு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால், இயல்பாகவே அதிமுக என்பது நமக்கான கட்சி என்ற மனநிலை கொங்கு பகுதி மக்களிடையே உருவாகியிருப்பதே அங்கு அதிமுக இவ்வளவு பெரிய வெற்றி பெற காரணமாக சொல்லப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் திமுகவால் ஒரு இடத்தை கூட கைப்பற்ற முடியாமல் போனது திமுகவுக்கு பெருத்த அடியாகவும் அவமானமாகவும் பார்க்கப்படுகிறது. என்ன செய்தால் கொங்கு மண்டலத்தில் கொடியேற்ற முடியும் என்ற குழப்பம் திமுகவுக்கு பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் எதிர் வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலுக்குள் கொங்குவை கைப்பற்றியே ஆக வேண்டும் முனைப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில்தான் கொங்கு மண்டலத்தில் திமுகவின் செல்வாக்கு நிறைந்த பகுதியாக மாற்ற வேண்டும் என்பதற்காகவும், எதிர் வருகிற மேயர் தேர்தலிலாவது கோவையை கைப்பற்றி விட வேண்டும் என்று கணக்கு போட்டுவரும் ஸ்டாலின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாலாஜியை கோவை மாவட்டத்தின் பொறுப்பாளராக நியமித்துள்ளார். அதற்காக கோவை பகுதியிலேயே தங்கியிருந்து கோவையில் திமுகவின் செல்வாக்கு உயர்த்த செந்தில்பாலாஜி அயராது பாடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கொங்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுக வில் ஓரங்கட்டப்பட்ட அடிப்பட்ட புள்ளிகளை திமுக பக்கம் இழுக்கும் முயற்சியில் செந்தில்பாலாஜி களமிறங்கி காய் நகர்த்தி வருகிறார்.
இந்நிலையில் நடைபெற உள்ள நகராட்டி மன்ற தேர்தலில் தன்னால் இயன்ற அளவுக்கு செந்தில் பாலாஜி சுற்றிச் சுழன்று வருவதாகவும் பல ஊடகவியலாளர்கள் கட்சித் தொண்டர்கள் கூறி வருகின்றனர். மறுபுறம் எப்படியும் கொங்கு அதிமுகவின் கோட்டை என்பதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் மறுபுறம் எஸ்.பி வேலுமணி தாராளம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் துக்ளக் இதயா கொங்கு மண்டலத்தில் முகாமிட்டு கள நிலவரங்களை ஆராய்ந்து வருகிறார். அவர் யூடியூப் சேனல் ஓன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் செய்தில் பாலாஜி கொங்குவை திமுகவின் கோட்டையாக மாற்ற உ.பிக்களை வறுத்தெடுத்து வருவதாகவும் இரவு 2 மணிக்கூட போன் செய்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு வருவதாகவும் பல நிர்வாகிகள் தங்களிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் செய்தில் பாலாஜி குறித்து கூறியதாவது:- கொங்கு மண்டலத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் சக்கர பாணியை மாற்றி விட்டு செந்தில் பாலாஜிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவில் கவுண்டர் சமூகத்தை சேர்ந்த பல நிர்வாகிகள் இருந்தாலும், அரசியலை துணிச்சலாக எதிர்கொள்ளவும், பொருளாதாரரீதியாக சிறப்பாக செயல்படவும் அதிமுகவில் உள்ள எஸ். பி வேலுமணிக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு திறமையானவர் செந்தில் பாலாஜிதான், அதனால்தான் அவரை ஸ்டாலின் களமிறங்கியிருக்கிறார். எஸ்.பி வேலுமணி முழுக்க முழுக்க கோயம்புத்தூரை தனது கோட்டையாக மாற்றி வைத்துள்ளார். அந்தக் கோட்டையை உடைக்க வேண்டும் என்றால் அதற்கு சரியான நபர் செந்தில்பாலாஜிதான், இதுவரை கொங்கு பகுதியில் செந்தில் பாலாஜி குறித்து விசாரித்ததில் அவரது கட்சிக்காரர்களே அவரது பணிகள் சிறப்பாக இருக்கிறது என கூறுகின்றனர்.
வழக்கமாக உள்ளாட்சித் தேர்தல்களில் கவுன்சிலர் போன்ற இடங்களுக்கு பணம் வாங்கிக் கொண்டு தான் சீட்டு வழங்குவார்கள். ஆனால் செந்தில் பாலாஜிக்கு பணம் ஒரு பொருட்டு அல்ல என்பதால் யார் உண்மையிலேயே வெற்றி பெறுபவர்கள். யார் செல்வாக்கு உள்ளவர்கள் என்பதை அறிந்து அவர் சீட்டு வழங்கியிருக்கிறார். கட்சி ஒரு சர்வே நடத்தினால், செந்தில்பாலாஜி தனிப்பட்டமுறையில் ஒரு சர்வே நடத்தி வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை அறிந்து அவர்களுக்கு சீட் வழங்கியிருக்கிறார். இதை அதிமுகவினரே கூட பாராட்டி சொல்வதைக் கேட்க முடிகிறது. இதன் எதிரொலியாக கோயம்புத்தூரில் ஒரே ஒரு வார்டில் மட்டும்தான் பாஜக முன்னிலையில் இருக்கிறது, அது இறுதி நேரத்தில் மாற வாய்ப்பிருக்கிறது. மொத்தத்தில் கோவையில் திமுக மேயர் வரவே அதிகம் வாய்ப்புள்ளது.
மொத்தத்தில் இந்த தேர்தல் என்பது செந்தில்பாலாஜிக்கு ஒரு அக்னி பரிட்சை போன்றதுதான். அதனால்தான் அவர் மிகக் கடுமையாக உழைத்து வருகிறார். அவர் புயல் வேகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறார். இரவு இரண்டு மணிக்கு கூட கட்சிக்காரர்களுக்கு போன் செய்து தேர்தல் பணிகள் குறித்து கேட்கிறார், இரவில் தூங்க முடியவில்லை என நிர்வாகிகளே கதறுகின்றனர். அதிகாலை 7 மணிக்கு விழித்துக்கொண்டு பணிகள் தொடங்கி விட்டதா என கேட்கிறார், தனக்கு முதல்வர் கொடுத்த பணியை சிறப்பாக முடித்துக் காட்ட வேண்டும் என்ற முனைப்பில் அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். முதல்வரின் குட் புக்கில் தொடரவேண்டும் என்ற முனைப்பில் செந்தில்பாலாஜி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதை அவரது கட்சியை சேர்ந்தவர்களே கூறுகின்றனர் என இதய தெரிவித்துள்ளார்.