
விரைவில் அரசியலில் அதிரடியாக களமிரங்கப்போவதாக கூறப்படும் உதயநிதி ஸ்டாலின், முதலில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது வரும் உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மேயராக போட்டியிடப்போவதாக தெரிகிறது.
சைதாப்பேட்டையில் நடந்த பொங்கல் விழா கூட்டத்தில் ‘சூரியன் உதித்தால் தாமரை மலரும், இலை கருகும்’ என்று ஒரே லைனில் தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணிக்கு தூபம் போட்டதோடு, பி.ஜே.பி. - அ.தி.மு.க. நட்புறவுக்கு வேட்டும் வைத்தார் உதயநிதி.
இந்நிலையில் பொங்கல் விழாவில் பேசும்போது ‘நான் சாதாரண தொண்டர்களில் ஒருவன் தான்’ என்று சொன்ன உதயநிதி, அதற்கு சில நாட்கள் முன்பு ஒரு டி.வி. சேனல் பேட்டியில் ‘தலைமை கேட்டுக் கொண்டால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவும் தயார் என தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், விரைவில் அரசியலில் களமிறங்கப் போதாக செய்திகள் றெக்கை கட்டி பறக்க தொடங்கியது.
உதயநிதியை தீவிர அரசியலுக்குள் இறக்கும்போது பக்காவான பதவியுடன் தான் இறக்கப் போகிறார்களாம். அதாவது ஸ்டாலின் கோலோச்சிய இளைஞர் அணியில்தான் உதயநிதிக்கும் பதவியாம்.
இப்போது இளைஞரணியின் மாநில செயலாளராக இருக்கும் சாமிநாதனின் செயல்பாடுகள் ஒன்றும் உருப்படியாக இல்லை என்பது தலைமையின் எண்ணம்.
எனவே அவரது இடத்தில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ.வை நியமித்துவிட்டு அந்த இடத்தில் உதயநிதியை உட்கார வைக்கலாம்! எனும் திட்டம் ஓடுகிறதாம்.
இந்நிலையில் வரும் உள்ளாட்சித் தேர்லில் சென்னை மேயர் பதவிக்கு திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஏற்பாடுகனை திமுக நிர்வாகிகள் செய்து வருவதாக கூறிப்படுகிறது.
ஆனால் இது எழுதுபவர்களின் ஆசை என்றும் அப்படி ஒரு எண்ணம் இருக்கிறதா இல்லையா என்று இதுவரை எந்த ஒரு முடியும் எடுக்கப்படவில்லை என்றும் முன்னாள் மேயர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.