
தமிழகத்தில் 4 ஆண்டுகள் எடப்பாடி தலைமையிலான அரசு நீடிப்பது சந்தேகம் தான் என எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்ற காரணத்திற்காகவும் பெரும்பான்மையை நிரூபிக்கும் நோக்கிலும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால்.
இந்த தகுதிநீக்க நடவடிக்கை ஜனநாயகப் படுகொலை என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.
இதனிடையே இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தமீம் அன்சாரி, தனியரசு ஆகியோருக்கு, சபாநாயகர் தனபால் மூன்று நாள் கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியது.
ஆனால் தனது ஆதரவு டிடிவி தினகரனுக்கே கருணாஸ் வெளிப்படையாக அறிவித்து விட்டார். தனியரசும், தமிமுன் அன்சாரியும் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்காத நிலையில், தகுதி நீக்கம் குறித்த வழக்கை தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நாகப்பட்டினத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் 4 ஆண்டுகள் எடப்பாடி தலைமையிலான அரசு நீடிப்பது சந்தேகம் தான் என தெரிவித்தார்.