தாண்டவமாடிய தவே... கப்சிப் கபில் சிபல்... வென்றதா வடக்கு வக்கீல்களின் வாதம்? 

Asianet News Tamil  
Published : Sep 20, 2017, 03:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
தாண்டவமாடிய தவே... கப்சிப் கபில் சிபல்... வென்றதா வடக்கு வக்கீல்களின் வாதம்? 

சுருக்கம்

what happened today at high court

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தவறு என்றும், சபாநாயகர் உத்தரவுக்கு தடை கோரியும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே,  சல்மான் குர்ஷித் ஆகியோர் வாதங்களை முன் வைத்தனர். இந்நிலையில்,  18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம்,  அடுத்த கட்ட விசாரணையை அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

முன்னதாக,  எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் ஒரு வழக்கு தொடரப் பட்டிருந்தது. 

இந்த வழக்குடன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மனுவும் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி துரைசாமி அறிவித்திருந்தபடி, இன்று இரு வழக்குகளும் விசாரிக்கப்பட்டன. 


தினகரன் சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, சல்மான் குர்ஷித் ஆகியோரும், ஸ்டாலின் தரப்பில் கபில் சிபலும் ஆஜரானார்கள். 
 
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில், சபாநாயகர் தனபால் தரப்பில் அரிமா சுந்தரம் ஆஜரானார்.   

தினகரன் தரப்பில் ஆஜரான துஷ்யந்த் தவே, தாங்கள் கட்சித் தாவல் தடைச் சட்டத்தை மீறவில்லை; தமிழக அரசில் ஊழல் மலிந்து விட்டதால் முதலமைச்சர் மீதான ஆதரவை திரும்பப் பெற்றோம். சபாநாயகரின் நடவடிக்கை நீதிக்கு எதிரானது. பதவிக் காலம் முடிய 4 ஆண்டுகள் உள்ள நிலையில் தகுதி நீக்க நடவடிக்கை சரியானதில்லை. 

சபாநாயகர் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார். முன்னர், பிப்ரவரியில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோம். எங்கள் எம்.எல்.ஏக்கள் வேறு எந்தக் கட்சிக்கும் செல்லவில்லை.

ஆனால் இப்போது, நம்பிக்கை வாக்கெடுப்பில் தாங்கள் வெற்றி பெறுவதற்காகவே, எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்  செய்யபட்டுள்ளனர். 

முன்னர், வெளியேறிய பன்னீர்செல்வம் அணியினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் மனு கொடுத்தோம். ஆனால், அது தொடர்பாக எந்த நோட்டீசும் பன்னீர்செல்வம் தரப்புக்கு அனுப்பவில்லை.  
எடியூரப்பா வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்த வழக்குக்கும் பொருந்தும்.

மாநில அரசியலில், மத்திய அரசு தலையிடுவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. சபாநாயகர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக அவர் உத்தரவு பிறப்பிக்க முடியாது.  அடிப்படை உறுப்பினராக நீடிக்கும் பட்சத்தில் கொறடா உத்தரவால் எங்களை எப்படி நீக்க முடியும். 

இன்றைய தமிழகச் சூழல் தில்லியில் உள்ள ஒரு சிலருக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. தமிழக அரசை சிலர் தில்லியில் இருந்து இயக்குகிறார்கள். 

முதலமைச்சருக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே தகுதி நீக்கம் செய்ய முடியும். ஆனால், எங்களுக்கு தகுதி நீக்கம் தொடர்பான ஆவணங்களை இதுவரை அளிக்கவில்லை. தகுதி நீக்கம் நேரில் தரப்படவில்லை. இணையதளத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது - என்று தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தவே வாதத்தை முன்வைத்தார்.  

இதற்கு பதிலளிக்கும் வகையில், சபாநாயகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுந்தரம், “இந்த வழக்குக்கு தேவையில்லாத வாதம் முன் வைக்கப்படுகிறது. நீதிமன்றத்தில் மத்திய அரசை குறைகூறக் கூடாது.  சபாநாயகர் குறித்து கண்மூடித்தனமாக குற்றச்சாட்டுகளை முன்வைப்பது கண்டனத்துக்குரியது. அரசு மற்றும் சபாநாயகர் மீது அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதால், அதற்கு  உரிய விளக்கம் அளிக்க கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே எங்கள் தரப்பில் பதிலளிக்க 10 நாட்கள் கால அவகாசம் தேவை. அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. பெரும்பான்மையை நிரூபிக்க போடப் பட்டுள்ள தடையை தேவைப்பட்டால் நீட்டித்துக் கொள்ளலாம்” எனக் கூறினார். 

இதனிடையே, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுதல் தொடர்பாக, முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு எந்த வித கோரிக்கையோ தகவலோ இதுவரை வரவில்லை  என்று ஆளுநர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.  

பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரிய வழக்கில் திமுக தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.  இந்த வழக்கில் அடுத்த உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என உத்தரவிட்டப்பட்டது. 
மேலும், இந்த வழக்கு முடியும் வரை 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கக் கூடாது என்று கூறிய நீதிமன்றம், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வகையில், சபாநாயகர் தரப்பில் விடுத்த கோரிக்கைகள் நீதிமன்றத்தால் முதல் கட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டதும் குறிப்பிடத் தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஸ்டார் தொகுதியாக மாறிய தூத்துக்குடி... திமுக, அதிமுக ஜாம்பவான்களுடன் மோதும் விஜய் நண்பர் - வெல்லப்போவது யார்?
சபதமும் சாதனையும்: 1991 தேர்தலில் ஜெயலலிதா தமிழக முதல்வரான த்ரில்லர் கதை.! அவமானத்தில் தொடங்கி ஆட்சியை கைப்பற்றியது வரை.!