யார் அந்த ஆர்வக்கோளாறு? டென்சன் ஆன மு.க.ஸ்டாலின்..! வாட்ஸ்ஆப் வைரல் பின்னணி..!

By Selva KathirFirst Published Apr 16, 2021, 10:34 AM IST
Highlights

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் டைம் உள்ள நிலையில் திமுக ஆட்சியில் யார் யார் அமைச்சர்கள், எந்தெந்த அமைச்சருக்கு என்னென்ன இலாகா என்று வாட்ஸ்ஆப்பில் பரவி வரும் தகவல் மு.க.ஸ்டாலினை டென்சன் ஆக்கியுள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் டைம் உள்ள நிலையில் திமுக ஆட்சியில் யார் யார் அமைச்சர்கள், எந்தெந்த அமைச்சருக்கு என்னென்ன இலாகா என்று வாட்ஸ்ஆப்பில் பரவி வரும் தகவல் மு.க.ஸ்டாலினை டென்சன் ஆக்கியுள்ளது.

கடந்த ஏப்ரல் 6ந் தேதி பதிவான வாக்குகள் வரும் மே 2ந் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கருத்துக்கணிப்புகள் அனைத்துமே திமுகவிற்கு சாதகமாக உள்ளன. எனவே தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது திமுக தான் என்கிற எண்ண ஓட்டம் பலமாகவே இருந்தது. ஆனால் தேர்தல் நாளன்று நிலைமை மாறிவிட்டதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. கடந்த தேர்தல்களை காட்டிலும் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்தது திமுக தரப்பை அமைதியாக்கியுள்ளது. அதிலும் சென்னையிலேயே வாக்குப்பதிவு மிக கடுமையாக குறைந்திருப்பது ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை யோசிக்க வைத்துள்ளது.

மேலும் தேர்தலுக்கு  இரண்டு நாட்களுக்கு முன்பிருந்து ஆளும் தரப்பு வாக்காளர்களை செம்மையாக கவனித்துள்ளதால் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வேட்பாளர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி உறுதி என்று கருத்துக்கணிப்புகள் கூறப்பட்டு வந்தாலும் தேர்தலுக்கு பிறகு இந்த எண்ணிக்கை 140ஆக குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார் என்கிற ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது.

இந்த நிலையில் மே 2ந் தேதிக்கு பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் அரசில் யார் யார் அமைச்சர்களாகப்போகின்றனர், அவர்களில் யார் யாருக்கு எந்தெந்த இலாகா என்கிற விவரங்களுடன் வாட்ஸ்ஆப்பில் ஒரு தகவல் சுற்றி வருகிறது. அதில் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி அன்பில் மகேஷ் பொய்யாமொழி என வாரிசுகளின் பெயர்கள் வரை பல புதுமுகங்கள் பெயர்கள் உள்ளன. இதே போல் மா.சுப்ரமணியம் தான் அடுத்த சபாநாயகர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வாட்ஸ்ஆப் தகவல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரை சென்றுள்ளது. அதனை பார்த்து யார் இந்த வேலையை பார்த்தது என்று கொதித்துள்ளார் ஸ்டாலின் என்கிறார்கள்.

கடந்த முறையும் இதே போன்ற தகவல்களை ஊடகங்களில் சிலர் வெளியிட்டதாகவும் ஆனால்தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்ததாகவும் திமுக தரப்பு சுட்டிக்காட்டுகிறது. இப்படி ஆர்வக்கோளாறுகள் சிலரால் தான் திமுக கடும் விமர்சனத்தை சந்திக்க நேரிடுவதாகவும் கூறுகின்றனர்.

click me!