சீக்கிரம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள்... திருச்சி விழாவில் வைகோவுக்கு ஸ்டாலின் மெசேஜ்!

By Asianet TamilFirst Published Feb 25, 2019, 4:38 PM IST
Highlights

திருச்சியில் மதிமுக சார்பில் நடைபெற்ற தமிழேந்தல் தலைவர் கலைஞர் புகழ் போற்றும் விழாவில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சீக்கிரம்  கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள் என்று சொல்ல வந்தேன் என்று பேசினார்.

திருச்சியில் மதிமுக சார்பில் நடைபெற்ற தமிழேந்தல் தலைவர் கலைஞர் புகழ் போற்றும் விழாவில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சீக்கிரம்  கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள் என்று சொல்ல வந்தேன் என்று பேசினார். 

திருச்சியில் மதிமுக சார்பில் ‘தமிழேந்தல் தலைவர் கலைஞர் புகழ் போற்றும் விழா’ நடைபெற்றது. இந்த விழாவில் முதன்மை விருந்தினராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில் அவர் பேசும்போது, “மதிமுக சார்பில் கலைஞருக்கு விழாவா என்று சிலருக்கு வயிற்றெரிச்சல், பொறாமை. திராவிட இயக்கத்தினர் ஒன்று சேர்ந்தால் சிலருக்கு எரிச்சல் வந்துவிடுகிறது. வைகோவை போர்வாள் என்று கலைஞர் அழைத்தார். தற்போது  திராவிட இயக்கத்தைக் காக்க போர்வாளுடன் இணைந்துள்ளேன். 

பொடாவில் வேலூர் சிறையில் வைகோ இருந்தபோது அவருடன் கூட்டணி பேச சந்தித்தேன். இப்போது சீக்கிரம் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள் என்று சொல்ல வந்திருக்கிறேன். தலைவர் கலைஞர் சொன்னதை சில நேரங்களில் இருவருமே மீறி நடந்திருக்கிறோம். ஆனால், வைகோ அதை எப்போதுமே மீறியதில்லை. 2004-ல் கலைஞர் கேட்டுகொண்டதால் பொடா சிறையிலிருந்து ஜாமீனில் வந்து வைகோ பிரச்சாரம் செய்தார். அப்போது நம் கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்றது. 

தற்போது நாடாளுமன்றத்தில் மீண்டும் 4 இடங்களைப் பிடிக்க புயல்வேகப் பயணத்துக்கு வைகோ தயாராகிவிட்டார். இந்தியாவில் மத பயங்கரவாதத்தை முறியடிக்க தளபதிகளும் போர்வாள்களும் ஒன்று சேருவோம்” என்று மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக கூட்டணியில் மதிமுக உடனான தொகுதி உடன்பாடு பற்றி எதிர்மறையாக செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், ஸ்டாலினின் பேச்சு திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு நிச்சயம் இடம் உண்டு என்பதை நிரூபித்திருக்கிறது.

ஆனால், மிகக் குறைந்த தொகுதிகளை மதிமுகவுக்கு திமுக ஒதுக்கும் என்று பேசப்படும் சூழலில், சீக்கிரம் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள் என்று ஸ்டாலின் தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

click me!