’கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் தோழர் முகிலன் காணாமல் போயிருக்கமாட்டார்’#WhereIsMugilan

By Muthurama LingamFirst Published Feb 25, 2019, 4:14 PM IST
Highlights

தேர்தல் கூட்டணி விவகாரங்களுக்கு மத்தியில், பத்து தினங்களாக  செயல்பாட்டாளர் முகிலன் மாயமான விவகாரம், தமிழ்நாட்டில் புதிய அதிர்வுகளை கிளப்பியிருக்கிறது. இது தொடர்பாக, ‘முகிலன் எங்கே’ என்கிற பொருள் படும்படி #WhereIsMugilan என்கிற ஹேஷ்டேக்கில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

தேர்தல் கூட்டணி விவகாரங்களுக்கு மத்தியில், பத்து தினங்களாக  செயல்பாட்டாளர் முகிலன் மாயமான விவகாரம், தமிழ்நாட்டில் புதிய அதிர்வுகளை கிளப்பியிருக்கிறது. இது தொடர்பாக, ‘முகிலன் எங்கே’ என்கிற பொருள் படும்படி #WhereIsMugilan என்கிற ஹேஷ்டேக்கில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

முகிலன், தமிழ்நாடு அறிந்த செயல்பாட்டாளர். இவர் வெளியில் இருந்த  நாட்களைவிட, சிறையில் இருக்கிற நாட்களே அதிகம். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர், ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தியவர்.
கடந்த பிப்ரவரி 15-ம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சில ஆதாரங்களை வெளியிட்டார்.

பிறகு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்றார். அதன்பிறகு அவரை காணவில்லை. இது தொடர்பாக மதுரையை மையமாகக் கொண்டு இயங்கும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குனர் ஹென்றி டிஃபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். பல்வேறு அமைப்பினரும் அவரை கண்டுபிடிக்க வலியுறுத்தி போலீஸில் புகார் மனுக்களையும் கொடுத்திருக்கிறார்கள்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் முகிலன் வந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகளை விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கும்படி ரயில்வே போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதற்கிடையே முகிலனை கண்டுபிடிக்க வலியுறுத்தி சமூக செயல்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகிறார்கள். இது தொடர்பாக #WhereIsMugilan என்கிற ஹேஷ்டேக்கில் பலர் பதிவிட்டு வருகிறார்கள்.

தோழர் முகிலன் எங்கே என்ற கேள்வியை முன்வைத்தும், அவரை உடனே மீட்க வலியுறுத்தியும் தோழமை இயக்கங்கள் இணைந்து திருச்சியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன், தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொறுப்பாளர் கென்னடி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த ட்விட்டர் பதிவில், ‘சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஆதாரங்களை வெளியிட்ட #Mugilan காணாமல் போய் இதுவரை எங்கிருக்கிறார் என தெரியவில்லை. கருத்துரிமையை நசுக்கும் மத்திய மாநில ஆட்சியில்,சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பில் இருப்போர் அவரை மீட்க வேண்டும்.அதுவரை சந்தேகம் உங்கள் மீதே!’ என கூறியிருக்கிறார்.

திமுக எம்.பி. கனிமொழி தனது பதிவில், ‘சூழலியலாளர் தோழர் முகிலன் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு ‘திட்டமிட்ட அரசின் சதி’ என்பதை வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்ட பின்னர், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காணவில்லை. விரைவில் அவரை வெளிக்கொண்டுவர காவல்துறை துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும்!’ என கூறியிருக்கிறார். திமுக எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா தனது ட்வீட்டில், கரு.பழனியப்பன் பேசிய வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், ‘கருணாநிதி உயிருடன் இருந்திருந்தால் முகிலன் இப்படி காணாமல் போயிருக்க மாட்டார்’ என்று பேசியுள்ளார்.

இந்நிலையில் இன்று அய்யா நல்லகண்ணு தலைமையில் ‘தோழர் முகிலனை மக்கள் முன் அரசு நிறுத்தவேண்டும்’ என்கிற முழக்கத்துடன் பல்வேறு அரசியல்கட்சியினர் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். இதில் கலந்துகொண்ட வி.சி.க. துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது முகநூல் பக்கத்தில்...

...சூழலியல் போராளி தோழர் முகிலன் 10 நாட்களாக காணவில்லை. அரசின் விரோத திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் முகிலனின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் இந்த கடத்தல் நடைபெற்றுள்ளதாக அய்யங்கள் எழுந்துள்ளன.

அரசுக்கு எதிராக போராடும் போராளிகளை ‘காணாமலடித்தல்’என்பது காஷ்மீர் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் இன்றும் தொடர்கதை தான்.தமிழீழத்தில் பல ஆண்டுகளாக அந்த அரச பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது. அதே‘காணாமலடித்தல்’தமிழகத்திலும் தொடங்கியிருப்பது ஆபத்தானது.

உடனடியாக தோழர் முகிலனை மக்கள் முன் அரசு நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில்அய்யா நல்லகண்ணு அவர்கள் தலைமையில் பல்வேறு கட்சியினர், இயக்கங்கள் ஆலோசனை நடத்தியது.விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் பங்கேற்றோம்.

தமிழக அரசே! தோழர் முகிலன் எங்கே? என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து மார்ச் 2 ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அய்யா நல்லகண்ணு தலைமையில் நடைபெறும் போராட்டத்தில்
விடுதலைச்சிறுத்தைகள் பங்கேற்கிறோம்...என்று பதிவிட்டிருக்கிறார்.

click me!