நான் உயிரோடு இருக்க காரணமே மு.க.ஸ்டாலின்தான்.. நெகிழ வைக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியனின் ஃபிளாஷ்பேக்.!

By Asianet TamilFirst Published Oct 9, 2021, 7:32 PM IST
Highlights

இன்று நான் உயிரோடு இருக்க காரணமே மு.க.ஸ்டாலின்தான் என்று தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிளாஷ்பேக் சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.
 

ஒவ்வோர் ஆண்டும் நீட் தேர்வு நடைபெறும் போதோ அல்லது முடிவுகள் வெளியான பிறகோ தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது நடந்தேறியவண்ணம் உள்ளது.  நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் அரசு நிறைவேற்றியது. மேலும் இதுதொடர்பாக 12 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதமும் எழுதியுள்ளார். இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்காக ‘ஜெயித்துக் காட்டுவோம் வா’ என்ற ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று பேசினார். “நான் மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். மிகமிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன். என்னுடைய பெற்றோரால் 10-ஆம் வகுப்பு வரைதான் என்னை படிக்க வைக்க முடிந்தது. குடும்ப வறுமை காரணமாக என்னை மேற்கொண்டு படிக்க வைக்க முடியவில்லை. ஆனால், நான் எப்படியும் படிக்க வேண்டும் என்று விரும்பினேன். சென்னை திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. சேர்ந்து படித்தேன். அப்போது எனக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள்கூட பிறந்துவிட்டனர். 
 நான் படிக்கும்போது என்னுடைய 10 வயது மகனும் படித்துக் கொண்டிருந்தான். ஓர் இளங்கலைப் பட்டத்தை மூன்று ஆண்டுகளில் முடிக்க வேண்டும். ஆனால், நான் ஐந்து ஆண்டுகள் கழித்து 1995-ஆம் ஆண்டில்தான் முடித்தேன். பிறகு, பெங்களூரு பல்கலைக்கழகத்தில் எல்எல்பி சேர்ந்து, 1999-இல் முடித்தேன். பத்தாம் வகுப்போடு முடிந்தது என்று நான் நினைத்திருந்தால், இன்று என் பெயருக்குப் பின்னால் எல்எல்பி எனப் போட்டுக்கொண்டிருக்க முடியாது. நான் சென்னை மேயராகவும் இருந்திருக்கிறேன். எம்.எல்.ஏ.வாகவும் இருந்திருக்கிறேன். தற்போது அமைச்சராக உள்ளேன். நாளைக்கு இது எல்லாம் இல்லாமலும் போனாலும்கூட, நான் படித்த படிப்பு என்னோடு மட்டுமே இருக்கும். என் குடும்பத்தில் யாரும் பட்டம் வாங்கியதில்லை. என் குடும்பத்தில் நான் மட்டுமே பட்டம் பெற்றவன்.
2004-ஆம் ஆண்டில் மதுரையில் செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சிக்குச் சென்றபோது கார் விபத்துக்குள்ளாகிவிட்டது. அதில் என்னோடு பயணித்த ஜம்புலிங்கம் என்பவர் இறந்துவிட்டார். எனது கால் ஆறு துண்டுகளாக உடைந்துபோனது. நான் மயக்க நிலைக்கு சென்றுவிட்டேன். பத்திரிகைகளில் எல்லாம் மா.சுப்பிரமணியன் கவலைக்கிடம் என்று செய்தி வந்தது. 15 நாட்கள் சுயநினைவில்லாமல் இருந்தேன். ஆனால், இன்றைய முதல்வர் மதுரை கேஎம்சி மருத்துவமனைக்கு வந்து நான் உயிர் பிழைக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் சொன்னார். இன்று நான் உயிரோடு இருக்க காரணமே மு.க.ஸ்டாலின்தான். அன்று மருத்துவர்கள் இனி நான் நடக்க முடியாது, சம்மணமிட்டு உட்கார முடியாது என்று சொன்னார்கள்.
படிப்படியாக உடற்பயிற்சி, யோகா செய்து இரண்டையும் செய்துகாட்டினேன். அதைப் பார்த்து மருத்துவருக்கே அதிர்ச்சி ஆகிவிட்டது. கடந்த 20 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். புதுச்சேரியில் மாரத்தான் ஓடினேன். இளைஞர்கள் எல்லாம் மூன்றே கால் மணிநேரம் ஓடிய தூரத்தை நான் இரண்டரை மணி நேரத்தில் கடந்தேன். அப்போது எனக்குள் தன்னம்பிக்கை ஏற்பட்டது. இப்போது எங்கெங்கெல்லாம் மாரத்தான் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் தேடி ஓடிக் கொண்டிருக்கிறேன். 55 வயதில் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மாரத்தான் ஓடினார்கள் என்று யாருமே இல்லை. அதனால், நான் இந்திய சாதனை புரிந்தேன். இதுவரை 131 மாரத்தான் ஓடி முடித்துள்ளேன்.


எப்போதுமே நம் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்கவே கூடாது. குறிப்பாக தேர்வுகளுக்குப் பிறகு வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்துவிடக் கூடாது. தேர்வுகளுக்குப் பிறகும் வாழ்க்கை இருக்கிறது. எனவே, வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் என்பதற்காகத்தான் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது” என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 

click me!