
நாடே அதிர்ச்சியடைந்த சம்பவத்திற்கு பிறகும் 6 நாட்கள் கடந்த நிலையில் நாட்டின் பிரதமர் இந்த படுகொலை குறித்து பேசாமல் மௌனம் காத்து வருகிறார் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- உத்தரபிரதேசத்தில் துணை முதல்வர் வரும்போது கருப்பு கொடி காண்பிக்க விவசாயிகள் திரண்டிருந்தபோது அவர்கள் மீது ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் மகனே காரை ஏற்றி படுகொலை செய்திருக்கிறார்கள். ஒரு மத்திய அமைச்சரின் மகனே இந்த செயலை செய்திருக்கிறார். தொடர்ச்சியாக அந்த நிகழ்ச்சியில் 8 நபர்கள் இறந்து இருக்கிறார்கள். ஆனால் அந்த மாநில முதல்வர் அந்த சம்பவம் குறித்து எதுவும் சொல்லவில்லை. எந்த குரலும் எழுப்பவில்லை. உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகு தான் 2 பேரை கைது செய்திருக்கிறார்கள்.
நாடே அதிர்ச்சியடைந்த சம்பவத்திற்கு பிறகும் 6 நாட்கள் கடந்த நிலையில் நாட்டின் பிரதமர் இந்த படுகொலை குறித்து பேசாமல் இருக்கிறார். அப்படி இருப்பதன் மூலம், வன்முறையை, அராஜகத்தை அவர் ஆதரிக்கிறார், ஊக்குவிக்கிறாரோ என்ற ஐயம் ஏற்படுகிறது. மோடி அரசு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாத சர்வாதிகாரத்தின் மீது நம்பிக்கை உள்ள பாசிச அரசு ஆகும். பாசிச முறையில் நாட்டில் ஆட்சி நடத்த மோடி விரும்புகிறார். பாசிச கொள்கை ஒருபோதும் வெற்றிபெறாது.
முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடந்து இருப்பதற்கு உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது மத்திய அரசு அந்த அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அதை எதையும் செய்யவில்லை. ஹிட்லர் கதி என்ன என்பது உலகம் அறியும். ஹிட்லருக்கு ஏற்பட்ட நிலை மோடிக்கு ஏற்பட்டுவிடக்கூடாது, அவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது நாட்டிற்கே அவமானம் என்று முத்தரசன் கூறியுள்ளார்.